சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் சக்தி அழைப்பு நிகழ்ச்சி


சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் சக்தி அழைப்பு நிகழ்ச்சி
x

ஆடித்திருவிழாவையொட்டி சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் நேற்று இரவு சக்தி அழைப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில், திரளான பக்தர்கள் ஊர்வலமாக வந்து அம்மனை தரிசனம் செய்தனர்.

சேலம்

ஆடித்திருவிழாவையொட்டி சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் நேற்று இரவு சக்தி அழைப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில், திரளான பக்தர்கள் ஊர்வலமாக வந்து அம்மனை தரிசனம் செய்தனர்.

ஆடித்திருவிழா

சேலத்தில் பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன் கோவிலில் ஆடித்திருவிழா கடந்த வாரம் பூச்சாட்டுதலுடன் தொடங்கி நடந்து வருகிறது. நேற்று இரவு சக்தி அழைப்பு நிகழ்ச்சி நடந்தது. அதாவது, கிச்சிப்பாளையம் நடராஜர் பஜனை மடத்தில் இருந்து மேளதாளங்கள் முழங்க சக்தி காளியம்மனை கோட்டை மாரியம்மன் கோவிலுக்கு அழைத்து வரப்பட்டது.

அப்போது, அம்மன் உற்சவ மூர்த்திகளை பூசாரிகள் ஸ்ரீதர், சந்தோஷ்குமார் ஆகியோர் கோவிலுக்கு ஊர்வலமாக கொண்டு வந்தனர். இந்த ஊர்வலத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பின்னர் கோட்டை மாரியம்மனுக்கு சிறப்பு அலங்காரம், ஆராதனை நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை தரிசனம் செய்தனர்.

முன்னேற்பாடு

விழாவின் முக்கிய நிகழ்வாக நாளை (புதன்கிழமை) முதல் 3 நாட்கள் பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. அனைத்து முன்னேற்பாடு பணிகளும் தயார் நிலையில் உள்ளது. சுமார் ஒரு லட்சம் பக்தர்கள் கோவிலுக்கு வந்து செல்வார்கள் என்பதால் திருட்டு சம்பவத்தை தடுக்க கோவில் நிர்வாகம் சார்பில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. கேமராக்கள் மூலமாகவும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதேபோல், குகை மாரியம்மன், காளியம்மன், அம்மாப்பேட்டை செங்குந்தர் மாரியம்மன், பலப்பட்டரை மாரியம்மன், பொன்னம்மாபேட்டை புத்துமாரியம்மன், செவ்வாய்பேட்டை மாரியம்மன், அன்னதானப்பட்டி மாரியம்மன், நெத்திமேடு தண்ணீர் பந்தல் காளியம்மன், களரம்பட்டி புத்து மாரியம்மன் உள்பட அனைத்து மாரியம்மன் கோவில்களிலும் ஆடித்திருவிழாவையொட்டி நேற்று இரவு சக்தி அழைப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில், அந்தந்த பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story