சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல்: குற்றவாளிக்கு அரசியல் குறுக்கீடு இல்லாமல் கடுமையான தண்டனையைப் பெற்றுத்தர வேண்டும் - சீமான்
மாணவ, மாணவியர்களுக்குப் பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து தயக்கமின்றித் துணிவுடன் பெற்றோர்களிடம் தெரிவிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று சீமான் கூறியுள்ளார்.
சென்னை,
ஐந்து வயது சிறுமியை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கிய திமுக நகர்மன்ற உறுப்பினருக்கு மிகக்கடுமையான தண்டனை கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கடலூர் மாவட்டம், விருத்தாச்சலத்தைச் சேர்ந்த ஐந்து வயது சிறுமியை, அவர் படிக்கும் பள்ளியின் தாளாளரும், திமுகவைச் சேர்ந்த விருத்தாச்சலம் நகர்மன்ற உறுப்பினருமான பக்கிரிசாமி பாலியல் துன்புறுத்தல் செய்துள்ள செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன். தனது பேத்தி வயதில் உள்ள ஏதுமறியா சிறு குழந்தை என்றும் பாராமல், சிறிதும் மனச்சான்றின்றி வன்கொடுமையைப் புரிந்த மிருகத்தனத்தை நினைக்கும்போது கடும் ஆத்திரமும், கோபமும் ஏற்படுகிறது.
மன்னிக்கவே முடியாத கொடுஞ்செயல் புரிந்த குற்றவாளிக்கு, எவ்வித அரசியல் குறுக்கீடோ, அதிகாரத் துணைபுரிதலோ இல்லாமல் விரைந்து நீதி விசாரணையை முடித்து, மிகக்கடுமையான தண்டனையைப் பெற்றுத்தர வேண்டுமெனவும், இது தொடர்பாகச் சட்டப்பேரவையில் தமிழ்நாடு முதலமைச்சர் அளித்த உறுதிமொழியை எவ்வித சமரசத்திற்கும் இடங்கொடுக்காமல் நிறைவேற்றி, சிறுமிக்கு இழைக்கப்பட்ட கொடுமைக்கு நீதி கிடைத்திடச் செய்திட வேண்டுமெனவும் தமிழ்நாடு அரசினை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.
மேலும், மாணவ, மாணவியர்களுக்குப் பாலியல் துன்புறுத்தல்கள் குறித்தும், பாலியல் கொடுமைகள் புரிவோர் குறித்தும் தயக்கமின்றித் துணிவுடன் உடனடியாகப் பெற்றோர்களிடமும், ஆசிரியர்களிடமும் தெரிவிப்பது குறித்து போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த தமிழ்நாடு முழுவதுமுள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளி – கல்லூரிகளில் மனநல மருத்துவர்கள் மூலம் சிறப்பு வகுப்புகள் நடத்த உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டுமெனவும் தமிழ்நாடு அரசினை கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.