தனியாக வீட்டில் இருந்த பெண்களுக்கு பாலியல் தொல்லை: சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரை பணி நீக்கம் செய்தது சரிதான்


தனியாக வீட்டில் இருந்த பெண்களுக்கு பாலியல் தொல்லை: சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரை பணி நீக்கம் செய்தது சரிதான்
x

தனியாக வீட்டில் இருந்த பெண்களிடம் குடிபோதையில் சென்று பாலியல் தொந்தரவு செய்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரை பணி நீக்கம் செய்தது சரிதான் என்று சென்னை ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

சென்னை,

திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக இருந்தவர் பாஸ்கரன். இவர் கடந்த 2012-ம் ஆண்டு தனியாக வீட்டில் இருந்த தாய், மகளை குடிபோதையில் சென்று பாலியல் தொந்தரவு செய்துள்ளார். அத்துமீறி வீட்டுக்குள் நுழைந்து, தன் ஆசைக்கு இணங்க வேண்டும் என்றும் மிரட்டியுள்ளார்.

இதுகுறித்து நீடாமங்கலம் இன்ஸ்பெக்டரிடம் அந்த பெண்கள் புகார் கொடுத்தனர். இந்த சம்பவம் குறித்து நடந்த துறை ரீதியான விசாரணையில், குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால், பாஸ்கரனை பணியில் இருந்து நீக்கம் செய்து போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார்.

அதிகாரம் இல்லை

இதற்கிடையில், ஒரு விபத்தில் பாஸ்கரன் மரணம் அடைந்தார். இதையடுத்து, பாஸ்கரனை பணி நீக்கம் செய்த உத்தரவை எதிர்த்து அவரது மனைவி, சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

மனுதாரரை பொருத்தவரை, தன் கணவர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக வேலை செய்தார். அந்த பதவி சப்-இன்ஸ்பெக்டர் பதவிக்கு நிகரானது. அப்படியிருக்கும்போது, சப்-இன்ஸ்பெக்டரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பணி நீக்கம் செய்ய அதிகாரம் இல்லை. அந்த அதிகாரம் டி.ஐ.ஜி.க்குதான் உள்ளது. எனவே, பணி நீக்கம் செய்த உத்தரவை ரத்துசெய்ய வேண்டும் என்று மனுதாரர் தரப்பில் வாதம் செய்யப்பட்டது.

போலீஸ் ஏட்டு

ஆனால் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பதவி என்பது போலீஸ் ஏட்டு பதவிக்கு நிகரானதுதான். அது சப்-இன்ஸ்பெக்டர் பதவிக்கு நிகரானது இல்லை. போலீஸ்காரராக பணியில் சேர்ந்து 25 ஆண்டுகள் பணி செய்தவர்கள், அதிலும் 10 ஆண்டுகள் ஏட்டாக பணி செய்தவர்களுக்கு, ஒரு பதவி உயர்வுதான் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பதவி என்று அரசு தரப்பில் வாதிடப்பட்டது. அதுதொடர்பான அரசாணையையும் தாக்கல் செய்யப்பட்டது.

மனுதாரரின் கணவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு மிகவும் தீவிரமானது. தனியாக வீட்டில் இருந்த பெண்களை குடிபோதையில் சென்று பாலியல் தொல்லை செய்தது மிகப்பெரிய குற்றம். எனவே, ஒழுக்கம் கொண்ட போலீஸ் துறைக்கு இவர் தேவையில்லை என்று கூறி, அவரை பணி நீக்கம் செய்து அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

தள்ளுபடி

இந்த நடவடிக்கை சரியானதுதான். இதில் ஐகோர்ட்டு தலையிட வேண்டிய அவசியமில்லை. எனவே, இந்த வழக்கை தள்ளுபடி செய்கிறேன்.

இவ்வாறு நீதிபதி கூறியுள்ளார்.


Next Story