திருவெண்ணெய்நல்லூர் அருகேபள்ளி மாணவிகள் 2 பேருக்கு பாலியல் தொந்தரவுவாலிபருக்கு போலீஸ் வலைவீச்சு
திருவெண்ணெய்நல்லூர் அருகே பள்ளி மாணவிகள் 2 பேருக்கு பாலியல் தொந்தரவு செய்த வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
5-ம் வகுப்பு மாணவிகள்
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் பகுதியை சேர்ந்த 10 வயதுடைய மாணவிகள் 2 பேர், அரசு பள்ளி ஒன்றில் 5-ம் வகுப்பு படித்து வருகின்றனர். இம்மாணவிகள் இருவரும் கடந்த சில நாட்களாக வகுப்பறையில் பாடத்தை சரிவர கவனிக்காமல் சோகத்துடன் இருந்துள்ளனர். இவர்களை கண்காணித்த பள்ளி ஆசிரியை ஒருவர், அந்த மாணவிகள் இருவரையும் தனியாக அழைத்து, ஏன் சரிவர பாடத்தை கவனிப்பதில்லை, எதற்காக சோகத்துடன் இருக்கிறீர்கள் என்று விசாரித்துள்ளார்.
ஓராண்டாக பாலியல் தொந்தரவு
அப்போது மாணவிகள் இருவரும் கூறிய தகவலை கேட்டு அந்த ஆசிரியை அதிர்ச்சியடைந்தார். அதாவது அரசூரை சேர்ந்த கூத்தன் மகன் அல்லிமுத்து (30) என்பவர் அம்மாணவிகள் இருவரிடமும் அடிக்கடி 10 ரூபாய் கொடுத்து தனிமையில் வரச்சொல்லி பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளார். இதேபோல் கடந்த ஓராண்டாக அந்த மாணவிகள் இருவருக்கும் அல்லிமுத்து பாலியல் ரீதியான தொந்தரவு அளித்து வந்துள்ளதாக ஆசிரியையிடம் கூறி மாணவிகள் இருவரும் கதறி அழுதனர்.
வாலிபருக்கு வலைவீச்சு
இதையடுத்து அந்த ஆசிரியை இதுபற்றி, விழுப்புரம் மாவட்ட குழந்தைகள் நல அலகின் சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர் நெப்போலியனுக்கு தகவல் தெரிவித்தார். உடனே அவர், அப்பள்ளிக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்.
பின்னர் இதுகுறித்து அவர், விழுப்புரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் அல்லிமுத்து மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை வலைவீசி தேடி வருகின்றனர்.