பாலியல் தொல்லை வழக்கு; பிரிஜ் பூஷண் மனு மீதான தீர்ப்பு 26-ந்தேதிக்கு ஒத்திவைப்பு
பிரிஜ் புஷண் மனு மீது வரும் 26-ந்தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என நீதிபதி பிரியங்கா ராஜ்புத் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
பா.ஜ.க. எம்.பி. பிரிஜ் பூஷண் மீது மல்யுத்த வீராங்கனைகள் கடந்த ஆண்டு பாலியல் குற்றச்சாட்டு சுமத்தினர். இது தொடர்பாக விசாரணை நடத்திய டெல்லி போலீசார், இந்த விவகாரத்தில் குற்றச்சாட்டுக்கான முகாந்திரம் இருப்பதாக கோர்ட்டில் தெரிவித்தனர்.
இதனிடையே மல்யுத்த வீராங்கனைகள் தொடர்ந்த பாலியல் தொல்லை வழக்கு தொடர்பான ஆவணங்களின் நகல்களை வழங்கக்கோரி டெல்லி ரோஸ் அவென்யூ கோர்ட்டில் பிரிஜ் பூஷண் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், "புகாரில் குறிப்பிடப்பட்டுள்ள தேதியில் நான் இந்தியாவில் இல்லை என்பதால், அது தொடர்பான ஆவண நகல்களை எனக்கு வழங்க வேண்டும்" என்று பிரிஜ் பூஷண் தெரிவித்திருந்தார்.
மேலும் பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக மீண்டும் விசாரணை நடத்த வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்திருந்தார். இந்த மனுவுக்கு டெல்லி காவல்துறை மற்றும் மல்யுத்த வீராங்கனைகள் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. வழக்கை இழுத்தடிக்கும் நோக்கில் பிரிஜ் புஷண் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார் என அவர்கள் தெரிவித்தனர். இந்த நிலையில் பிரிஜ் புஷண் மனு மீது வரும் 26-ந்தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என நீதிபதி பிரியங்கா ராஜ்புத் தெரிவித்துள்ளார்.