'ரெடிமேடு' ஆடைகள் வரவு அதிகரிப்புதையல் தொழில் நலிவடைகிறதா?


ரெடிமேடு ஆடைகள் வரவு அதிகரிப்புதையல் தொழில் நலிவடைகிறதா?
x

‘ரெடிமேடு’ ஆடைகள் வரவு அதிகரிப்பு தையல் தொழில் நலிவடைகிறதா? என்பது குறித்து பல்வேறு தரப்பினர் கருத்து தெரிவித்து இருக்கிறார்கள். அதன் விவரம் வருமாறு:-

நாமக்கல்

பொங்கல், தீபாவளி, கிறிஸ்துமஸ், பெருநாள் போன்ற பண்டிகை காலங்களில் தையல் கடைகளில் துணிமணிகள் மலைபோல் குவிந்து கிடக்கும். தையல் கலைஞர்கள் இரவு, பகலாக துணிகளை தைப்பார்கள். காலப்போக்கில் நாகரிக வளர்ச்சிக்கு ஏற்ப 'ரெடிமேடு' என்று சொல்லப்படும் ஆயத்த ஆடைகள் அறிமுகமாகின.

குழந்தைகள் முதல் பெரியவர் வரையிலான அனைவருக்கும் இந்த ஆயத்த ஆடைகள் கிடைக்கின்றன. கடைகளுக்கு நேரடியாகச் சென்று, விருப்பமான உடையை, விரும்பிய கலரில் தேர்வு செய்து, கண்ணாடி முன் நின்று அணிந்து அழகு பார்க்கும் வசதி இருக்கிறது. இதனால் துணி எடுத்து தைத்து அணிய வேண்டும் என்ற பழக்கம் குறைந்து வருகிறது. இதன் காரணமாக தையல் தொழில் நசிந்து வருகிறதோ? தையல் கலைஞர்கள் நலிந்து வருகிறார்களோ? என்ற சந்தேகங்கள் எழுந்து வருகின்றன.

அதேநேரம் ரெடிமேடாகவே தைத்தாலும் அதையும் தொழிலாளர்கள்தானே தைக்கிறார்கள். பெண்களுக்கான பிளவுசுகள் ரெடிமேடாக வந்தாலும் இளம் பெண்கள் மாடலாக தைத்து அணிவதைத்தான் விரும்புகிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது. அதை உறுதிப்படுத்தும் வகையில் பெண்களுக்கு பிளவுசுகள் தைக்க பிரத்தியேகமாக நிறையக் கடைகள் முளைத்திருக்கின்றன.

திருமணம் மற்றும் விழாக்களின் போது பெண்கள் கட்டும் சேலைகளுக்கு மேட்சாக, பிளவுசுகளில் முத்துக்களை கோத்தாற்போல் பாசிகளில், பல வண்ண சித்திர வேலைப்பாடுகள் செய்து தருகிறார்கள். 'ஆரி ஒர்க்' என்று இதைச் சொல்கிறார்கள். அவ்வாறு வேலைப்பாடுகளுடன் ஒரு பிளவுசு தைக்க ஆயிரம், இரண்டாயிரம் அல்ல; ரூ.10 ஆயிரம், ரூ.20 ஆயிரம் என கூலி ஆகுமாம். எனவே தையல் தொழில் நசிந்து வருக்கிறதா? நாகரிகத்திற்கு ஏற்றவாறு வேறு போக்கில் வளர்ந்து இருக்கிறதா? தையல் கலைஞர்களின் நிலை என்ன? என்பது குறித்து பல்வேறு தரப்பினர் கருத்து தெரிவித்து இருக்கிறார்கள். அதன் விவரம் வருமாறு:-

அரசின் ஆதரவுக்கரம்

தமிழ்நாடு தையல் தொழிலாளர் முன்னேற்றச் சங்கத்தின் தலைவர் திவ்யநாதன்:-

தமிழ்நாட்டில் 60 லட்சம் தையல் தொழிலாளிகள் இருந்தார்கள். 'ரெடிமேடு' ஆடைகள் பயன்பாடு அதிகரித்த பின்னர் தையல் தொழில் நலிவடையத் தொடங்கியது. எனவே தையல் தொழிலாளர்கள் பலர் கட்டிட வேலை, பெயிண்டிங், ஆட்டோ ஓட்டுவது என்று தங்கள் தொழிலை மாற்றிக் கொண்டனர். இதனால் இந்தத் தொழில் அடுத்த தலைமுறைக்கு இருக்குமா? என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. தையல் தொழிலையும், தொழிலாளர்களையும் பாதுகாக்க வேண்டிய கடமை, பொறுப்பு அரசுக்கு இருக்கிறது. தையல் தொழிலாளர்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு தனி நலவாரியம் அமைத்துத் தரவேண்டும். ரெடிமேடு ஆடைகள் வடமாநிலங்களில் இருந்து தைத்து அனுப்பப்படுகின்றன. தமிழ்நாட்டிலும் இதுபோன்ற ஆடைகள் தயாரிப்பு நிறுவனத்தைக் கொண்டு வந்து தமிழகத்தை சேர்ந்த தையல் கலைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தரவேண்டும்.

அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சீருடை தைக்கும் ஒப்பந்தத்தை அரசியல் கட்சி பிரமுகர்கள் மூலம் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வழங்காமல் நேரடியாக தையல் கலைஞர்களிடம் வழங்க வேண்டும். எங்கள் சங்கம் சார்பில் தனியார் பள்ளிக்கூடங்கள், தனியார் நிறுவனங்களின் சீருடையைத் தைத்து தருவதற்கான முயற்சிகளை முன்னெடுத்துள்ளோம். தடுமாறி வரும் தையல் தொழில் கீழே விழாமல் இருக்க அரசாங்கம் ஆதரவுக்கரம் கொடுக்க வேண்டும்.

அனைத்தும் ரெடிமேடாக

நாமக்கல் மாவட்டம் எஸ்.வாழவந்தியை சேர்ந்த டெய்லர் ராஜன்:-

ரெடிமேடு ஆடைகள் வந்ததால் தையல் தொழில் முழுவதும் பாதிக்கப்பட்டு உள்ளது. ரெடிமேடு ஆடைகள் வருவதற்கு முன்பு, தீபாவளி, பொங்கல், கோவில் திருவிழாக்கள், திருமண நிகழ்ச்சிகள் மற்றும் காதணி விழா உள்பட பல்வேறு விசேஷ நிகழ்ச்சிகளுக்கு வாடிக்கையாளர்கள் அதிகளவில் துணிகளை தைப்பதற்கு கொடுப்பார்கள். தற்போதைய காலத்தில் பெரும்பாலானோர் துணியை தைத்து அணிவது கிடையாது. ரெடிமேடு துணிகள் மீதான ஈர்ப்பு அதிகரித்துவிட்டது. அனைத்து விதமான விசேஷங்களுக்கு தேவையான துணிகள் அனைத்தும் ரெடிமேடாக கிடைக்கிறது. மணமகன் மற்றும் மணமகளுக்கான முகூர்த்த ஆடைகள் மட்டுமே தைப்பதற்கு கொடுக்கின்றனர். அதேபோல் பள்ளி சீருடைகள் மற்றும் பெரிய உருவம் கொண்டவர்களுக்கான ஆடைகளை தைக்க டெய்லர்களை நாடுகின்றனர். அதன் காரணமாக தையல் தொழில் நலிவடைந்த நிலையில் உள்ளது. அதனால் புலி வாலை பிடித்ததை போல, தெரிந்த தொழிலை விட்டுவிட்டு மாற்றுத்தொழிலுக்கும் செல்ல முடியாத நிலையில் டெய்லர்கள் உள்ளனர்.

பலவகையான மாடல்களில்

திருச்செங்கோடு தனியார் ரெடிமேடு துணி தயாரிப்பு நிறுவன மேலாளர் சீனிவாசன்:-

தற்போதைய வாழ்க்கை முறையாலும், பணிச்சுமையாலும் பெரும்பாலானோர் குடும்பத்தினரிடம் கூட பேசுவதற்கு நேரம் இல்லாமல் உள்ளனர். அத்தகைய சூழலில் தங்களுக்கு தேவையான ஆடைகளை தைத்து தயார் செய்யும் வரை காத்திருப்பதற்கு யாரும் தயாராக இல்லை. அதன் காரணமாக ரெடிமேடு ஆடைகளை நாடி செல்வோர் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. மேலும் ரெடிமேடு ஆடைகள் பலவகையான மாடல்களில் கிடைக்கின்றன.

மேலும் ரெடிமேடு துணி கடைகளில் ஆடைகளை அணிந்து பார்க்க முடியும். அதன் மூலம் வாடிக்கையாளர்கள் தங்களுக்கு எந்த மாடலில் ஆடை அணிந்தால் நன்றாக இருக்கும் என்பதை அணிந்து பார்த்து தேர்வு செய்ய முடிகிறது. அப்போது ஆடை பிடிக்கவில்லை என்றால் கடையிலேயே அவர்கள் அதை மாற்றிக் கொள்ள முடியும். ஆனால் துணியை எடுத்து தைக்கும்போது அது சாத்தியப்படாது. எனவே ரெடிமேடு ஆடைகளால் வாடிக்கையாளர்கள் மனநிறைவு அடைகின்றனர். அதன் காரணமாக ஏராளமான கார்மெண்ட்ஸ் நிறுவனங்கள் ரெடிமேடு ஆடை நிறுவனத்திடம் ஒப்பந்தம் போட்டு துணிகளை தைத்து வருவது அதிகரித்து இருக்கிறது.

தைத்து அணியதான் விரும்புகிறார்கள்

வெண்ணந்தூர் கல்லூரி மாணவி சவுமியா:-

ஆண்களை கவரும் வகையில் ஏராளமான ரெடிமேடு ஆடைகள் உள்ளன. ஆனால் பெண்களுக்கு என ரெடிமேடு ஆடைகள் இருந்தாலும், அது போதுமானதாக இல்லை. குறிப்பாக ரெடிமேடு பிளவுஸ்கள் பெண்களுக்காக தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இருப்பினும் பெரும்பாலான பெண்கள் பிளவுஸ்களை தைத்து அணியதான் விரும்புகிறார்கள். சிலர் விருப்பத்திற்கு ஏற்ப புதுப்புது மாடல்களில் பிளவுஸ்களை தைத்து அணிய விரும்புவார்கள். அதனால் பெண் டெய்லர்களுக்கான மவுஸ் அதிகரித்துதான் வருகிறது. அதன் காரணமாக ஏற்படும் நேரமின்மையால், பெண் டெய்லர்களால் குறித்த நேரத்தில் ஆடைகளை வாடிக்கையாளர்களிடம் வழங்க முடியாத நிலையே உள்ளது. எனவே அதை கருத்தில் கொண்டு பெண் டெய்லர்கள் உரிய நேரத்தில் வாடிக்கையாளர்களுக்கு துணியை தைத்து தர வேண்டும்

சிங்களாந்தபுரம் டெய்லர் பழனிசாமி:-

ரெடிமேடு துணி வருகையால் டெய்லர்களின் வருவாய் இல்லாமல் போனது. குறிப்பாக நகரத்தை ஒப்பிடுகையில், கிராமப்புறங்களில் உள்ள டெய்லர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. அங்கு புதுத் துணிகளை தைப்பதற்கு யாரும் டெய்லரை நாடுவதில்லை.

எனவே 60 வயதுக்கு மேற்பட்ட கிராமப்புற டெய்லர்களுக்கு நலவாரியத்தின் மூலம் மாதம் ரூ.2,500 ஓய்வூதியமாக வழங்க வேண்டும். அதேபோல் கிராமப்புற டெய்லர்களுக்கு பள்ளி சீருடைகளை தைக்கும் ஆர்டர் கிடைக்க அரசு வழிவகை செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

என்னதான் ரெடிமேடு ஆடைகள் வந்தாலும், துணியை எடுத்து தையல் தொழிலாளியிடம் தைத்து உடுத்துவதை இன்னும் சிலர் வழக்கமாக கொண்டுள்ளனர். ஆனால் ரெடிமேடு ஆடை விலையை காட்டிலும் தையல் தொழிலாளர்கள் கேட்கும் தையல் கூலி அதிகம் என்ற ஆதங்கமும் மக்களிடையே இருக்கிறது.


Next Story