பாதாள சாக்கடை குழியில் இருந்து வெளியேறிய கழிவுநீர்
தஞ்சை மாநகரில் பாதாள சாக்கடை குழியில் இருந்து கழிவுநீர் வெளியேறி சாலையில் ஓடியதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர்.
தஞ்சாவூர்:
தஞ்சை மாநகரில் பாதாள சாக்கடை குழியில் இருந்து கழிவுநீர் வெளியேறி சாலையில் ஓடியதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர்.
பாதாள சாக்கடை திட்டம்
தஞ்சை மாநகரில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக கரந்தை, வடக்கு வாசல், பள்ளிஅக்ரகாரம், மாரிக்குளம் உள்ளிட்ட இடங்களில் கழிவுநீர் உந்து நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது. இங்கிருந்து கழிவுநீர் ராட்சத குழாய்கள் மூலம் சமுத்திரம் ஏரியில் உள்ள பாதாள சாக்கடை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது.
அங்கு கழிவுநீர் சுத்திகரிக்கப்பட்டு தண்ணீர் பாசனத்துக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் தஞ்சை மாநகரில் பாதாள சாக்கடைகளில் ஏற்படும் அடைப்புகளை சரி செய்வதற்காக 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் ஆள்நுழை குழிகளும் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த ஆள்நுழை குழிகள் மீது கான்கிரீட் மூடியும் போடப்பட்டுள்ளது.
கழிவுநீர் வெளியேற்றம்
ஒரு சில பகுதிகளில் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டால் இந்த குழிகள் வழியாக கழிவுநீர் வெளியேறி வருகிறது. சில இடங்களில் அந்த குழிகள் மீது போடப்பட்டுள்ள மூடி உடைந்து விடுவதால் கழிவுநீர் வெளியேறி சாலைகளில் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது.
இந்த நிலையில் தஞ்சை பூக்காரத்தெருவில் உள்ள மாரிகுளம் சுடுகாடு அருகே அண்ணாநகர் சாலையையும், நாஞ்சிக்கோட்டை சாலையையும் இணைக்கும் சாலையில் உள்ள ஆள்நுழை குழி வழியாக கழிவுநீர் வெளியேறி சாலையில் வழிந்தோடுகிறது. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றமும் வீசுகிறது. இந்த சாலையில் எப்போதும் ஆள்நடமாட்டம் அதிக அளவில் காணப்படும்.
வாகன ஓட்டிகள் அவதி
இருசக்கர வாகனங்களில் ஏராளமானோர் வந்து செல்வார்கள். சாலையில் கழிவுநீர் ஓடியதால் அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் கூட செல்ல முடியவில்லை. ஒரு சிலரை தவிர மற்றவர்கள் அனைவரும் மாற்று பாதையில் சென்றனர். மேலும் சாலையில் ஓடிய கழிவுநீர் அருகில் உள்ள வடிகாலில் வடிந்து தேங்கி நின்றதால் அந்த பகுதியில் வசித்து வந்தவர்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளானார்கள்.
மாரிகுளம் பகுதியில் உள்ள கழிவுநீர் உந்து நிலையத்தில் ஏதாவது பழுது ஏற்பட்டு இருக்கலாம் எனவும், அதனால் தான் கழிவுநீர் வெளியேறி வருவதாகவும், உடனடியாக பழுதை சரி செய்து கழிவுநீர் சாலையில் வெளியேறாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.