விருதுநகர் பகுதியில் கடும் குடிநீர் பிரச்சினை


விருதுநகர் பகுதியில் கடும் குடிநீர் பிரச்சினை
x

விருதுநகர் பகுதியில் கடும் குடிநீர் பிரச்சினை உள்ளது குறித்து நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் புகார் அளித்தனர்.

விருதுநகர்


விருதுநகர் பகுதியில் கடும் குடிநீர் பிரச்சினை உள்ளது குறித்து நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் புகார் அளித்தனர்.

நகராட்சி கூட்டம்

விருதுநகர் நகராட்சி கூட்டம் நகரசபை தலைவர் மாதவன் தலைமையில் நடைபெற்றது. துணைதலைவர் தனலட்சுமி, கமிஷனர் லீனா சைமன், என்ஜினீயர் மணி மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். கூட்டம் தொடங்கியதும் அனைத்து கவுன்சிலர்களும் தங்கள் வார்டு பகுதியில் உள்ள குடிநீர் பிரச்சினையை விரிவாக எடுத்து கூறினர்.

அதிலும் தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டத்திற்கான குழாய் பதிக்கும் போது ஏற்கனவே உள்ள குடிநீர் வினியோக குழாய்கள் உடைக்கப்படுவதால் குடிநீர் வினியோகம் பாதிக்கப்படுவதாக கவுன்சிலர் முத்துராமன் புகார் கூறினார். கவுன்சிலர் பால்பாண்டி, முத்துலட்சுமி, ஜெயக்குமார், ராமச்சந்திரன், மதியழகன் உள்ளிட்டோர் தங்கள் வார்டு பகுதியில் உள்ள குடிநீர் பிரச்சினையை எடுத்து கூறினர்.

குடிநீர்

இதற்கு பதில் அளித்த தலைவர் மாதவன், தாமிரபரணி தண்ணீர் முற்றிலுமாக வரவில்லை. ஆனைக்குடத்தில் இருந்து தான் தண்ணீர் கொண்டு வரப்படுவதாகவும் தெரிவித்தார். ஒண்டிப்புலியிலிருந்து ஏன் தண்ணீர் எடுக்கவில்லை என்று கவுன்சிலர்கள் கேள்வி எழுப்பினர். ஆனாலும் குடிநீர் பிரச்சினைக்குரிய தீர்வு குறித்து எந்த பதிலும் அளிக்கப்படவில்லை.

கூட்டத்தில் இருந்த கமிஷனர் மற்றும் என்ஜினீயர் இதுகுறித்து எந்த தகவலும் தர தயாராக இல்லை. கவுன்சிலர் ராஜ்குமார் தனது வார்டு பகுதியில் வசித்த நகரசபை ஊழியர் முருகேசன் உள்ளாட்சி தேர்தலின் போது பணியில் இருந்த நிலையில் அவர் இறந்து விட்டதால் அவருக்கு வந்த பணத்தை கேட்டு அவரது மனைவி பலமுறை அலைந்தும் கிடைக்காத நிலையில் தற்போது விசாரித்த போது அவருக்கு வந்த பணம் நகரசபை ஊழியர்களால் பிரித்து எடுக்கப்பட்டு விட்டதாக புகார் கூறினார்.

கவுன்சிலர் புகார்

இதுபற்றி விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக தலைவர் பதிலளித்தார்.

கவுன்சிலர் ஆறுமுகம் டெண்டர் விடப்படும் விவரம் குறித்து நகராட்சி கூட்டத்தில் கொண்டு வர வேண்டும் என கேட்டுக்கொண்டார். சோலார் விளக்குகள் தரமாக இல்லை என கவுன்சிலர் ஜெயக்குமார் புகார் கூறினார். தொடர்ந்து பல்வேறு தீர்மானங்கள் விவாதத்திற்கு பின் நிறைவேற்றப்பட்டன.


Next Story