டிரான்ஸ்பார்மர் அமைத்து மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும்
டிரான்ஸ்பார்மர் அமைத்து மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும்
கோட்டூர்:
கோட்டூர் அருகே வண்டல்வெளி கிராமத்திற்கு டிரான்ஸ்பார்மர் அமைத்து மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும் என கலெக்டருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வண்டல்வெளி கிராமம்
திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே செறுகளத்தூர் ஊராட்சி வண்டல்வெளி கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்திற்கு 1957-ம் ஆண்டு முதல் இன்று வரை ஒருமுனை(சிங்கிள் பேஸ்) மின்சாரம் மட்டுமே வழங்கப்படுகிறது. இன்றைய காலகட்டத்தில் குடும்பங்கள் அதிகரித்து வருவதால் தெருவிளக்குகள், மின்மோட்டார்கள் தேவையும் அதிகரித்தது. ஆனால் குறைந்த அளவே மின்சாரம் கிடைத்தது. மேலும் அடிக்கடி மின்தடையும் ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் மிகவும் அவதியடைந்தனர்.
மின்கம்பம் நடப்பட்டது
இதையடுத்து அப்பகுதி மக்கள் தங்கள் கிராமத்திற்கு டிரான்ஸ்பார்மர் (மின்மாற்றி) அமைத்து மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும் என்று பலமுறை நேரிலும், கடிதம் மூலமும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவித்தனர். ஆனாலும் இதுநாள் வரை எந்த நடவடிக்கையும் இல்லை. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு கிராம மக்கள் சார்பில் ரூ.35 ஆயிரம் வரை செலவு செய்து மின்கம்பம் நடப்பட்டது. ஆனால் இதுவரை அங்கு டிரான்ஸ்பார்மர் அமைக்கப்படவில்லை. மேலும் மும்முனை மின்சாரமும் வழங்கப்படவில்லை.
டிரான்ஸ்பார்மர் அமைக்க வேண்டும்
எனவே வண்டல்வெளி கிராமத்திற்கு டிரான்ஸ்பார்மர் அமைத்து மும்முனை மின்சாரம் வழங்க மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறும் பட்சத்தில் கிராம மக்கள் சார்பில் சித்தமல்லி கடைவீதியில் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று கிராமமக்கள் மாவட்ட கலெக்டருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளனர்.