"விளையாட்டு மைதானம் அமைக்க ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடு"-அமைச்சர் ராஜகண்ணப்பன் பேச்சு


விளையாட்டு மைதானம் அமைக்க ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடு-அமைச்சர் ராஜகண்ணப்பன் பேச்சு
x

“தமிழகத்தில் ஒவ்வொரு தொகுதியிலும் விளையாட்டு மைதானம் அமைக்க ரூ.3 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது” என்று அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறினார்.

திருநெல்வேலி

"தமிழகத்தில் ஒவ்வொரு தொகுதியிலும் விளையாட்டு மைதானம் அமைக்க ரூ.3 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது" என்று அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறினார்.

பரிசளிப்பு விழா

நெல்லை மாவட்ட அளவில் முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா பாளையங்கோட்டை நேருஜி கலையரங்கத்தில் நேற்று நடந்தது.

சபாநாயகர் அப்பாவு தலைமை தாங்கினார். கலெக்டர் கார்த்திகேயன் முன்னிலை வகித்தார். மாவட்ட விளையாட்டு அலுவலர் கிருஷ்ணசக்கரவர்த்தி வரவேற்று பேசினார். பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் கலந்து கொண்டு, வெற்றி பெற்ற வீரர்-வீராங்கனைகளுக்கு பரிசுகளை வழங்கினார்.

ரூ.3 கோடி ஒதுக்கீடு

அப்போது, அவர் பேசியதாவது-

நெல்லை மாவட்டம் கல்வியில் சிறந்த மாவட்டமாக விளங்குகிறது. விளையாட்டு துறை இவ்வளவு நாள் முக்கியம் வாய்ந்த துறையாக இருந்தது இல்லை. ஆனால் தற்போது உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரு விளையாட்டு மைதானம் கட்டிக்கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளார். அந்த வகையில் விளையாட்டு மைதானத்திற்கு தலா ரூ.3 கோடி ஒவ்வொரு தொகுதிக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பழமையான விளையாட்டுகளை ஊக்குவிக்க வேண்டும் என தமிழக முதல்-அமைச்சர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அவர் தனது இலக்கை நோக்கி பயணத்தை மேற்கொண்டு வருகிறார்.

தமிழக அளவில் நடைபெறும் போட்டிகளில் நெல்லை மாவட்டத்தில் உள்ள வீரர்-வீராங்கனைகள் அதிகமான பதக்கங்களை வென்று வரவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில் ஞானதிரவியம் எம்.பி, அப்துல்வகாப் எம்.எல்.ஏ., மேயர் சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ, மாநகராட்சி ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி, நெல்லை மத்திய மாவட்ட பொறுப்பாளர் டி.பி.எம்.மைதீன்கான், மாநகர செயலாளர் சுப்பிரமணியன், முன்னாள் எம்.எல்.ஏ. மாலைராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கூடைப்பந்து பயிற்றுனர் பழனி விக்னேஷ் நன்றி கூறினார்.

சபாநாயகர் அப்பாவு

இதைத்தொடர்ந்து சபாநாயகர் அப்பாவு நிருபர்களிடம் கூறியதாவது:-

அமைச்சர் செந்தில் பாலாஜி நீதிமன்ற காவலில் இருக்கிறாரே தவிர குற்றவாளியல்ல. முதல்-அமைச்சரின் பரிந்துரையின் பேரில் அவரை பதவி நீக்கம் செய்யலாம் அல்லது அவரே ராஜினாமா செய்யலாம். அதனை தாண்டி அவரை நீக்கம் செய்ய முடியாது.

கடந்த 2010-ம் ஆண்டு அமித்ஷா குஜராத்தில் அமைச்சராக இருக்கும் போது போலி என்கவுண்ட்டர் வழக்கில் கைது செய்யப்பட்டு 3 மாதம் சிறையில் இருந்தபோது அவர் இலாகா இல்லாத அமைச்சராக இருந்தார். அவர்களுக்கு ஒரு நியாயம், எங்களுக்கு ஒரு நியாயமா?.

எடுத்தோம் கவிழ்த்தோம் என கவர்னர் செயல்படுகிறார். இந்தியா மதசார்பற்ற நாடு. மதசார்பின்றி நடப்பேன் என சொல்லிவிட்டு மதசார்போடு கவர்னர் செயல்படுகிறார். கவர்னர் புதுச்சேரியில் ஒரு பணியில் இருந்துகொண்டு ஊதியம் வாங்குவதாக கூறப்படுகிறது. அந்த தகவல் இணையதளத்திலும் உள்ளது. கவர்னராக இருக்கும் ஒருவர் வேறு ஒரு இடத்தில் ஊதியம் பெற்றுக்கொண்டு செயல்படக்கூடாது. இதுதொடர்பாக ஒரு உறுப்பினரும் சட்டப்பேரவையில் கேள்வியும் எழுப்பி உள்ளார். அதற்கு இதுவரை கவர்னர் எந்த பதிலும் தெரிவிக்கவில்லை. கவர்னர் அரசியல்வாதி போல் செயல்பட்டு வருகிறார். அந்த போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story