தொகுப்பு வீடு இடிந்து விழுந்து பெண் படுகாயம்
திருவெண்ணெய்நல்லூர் அருகே அரசின் தொகுப்பு வீடு இடிந்து விழுந்து பெண் படுகாயம்
திருவெண்ணெய்நல்லூர்
திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள ஆலங்குப்பம் ஊராட்சியில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு அரசு சார்பில் கட்டித்தரப்பட்ட தொகுப்பு வீடுகள் பழுதடைந்துள்ளன. இவற்றை சீரமைத்து தர வேண்டும் என அங்குள்ள மக்கள் அதிகாரிகளிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 10.30 மணியவில் அதே பகுதியை சேர்ந்த சேகர்(வயது 45), அவரது மனைவி செல்வி(43) மற்றும் இவர்களின் 3 குழந்தைகள் வீட்டின் வெளியே வாசலில்படுத்து தூங்கிக்கொண்டிருந்தனர்.
அப்போது வீட்டின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்து செல்வி படுகாயம் அடைந்தார். உடனே அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். சேகர் மற்றும் அவரது 3 குழந்தைகளும் காயமின்றி உயிர் தப்பினர். இது சம்பந்தமாக திருவெண்ணெய்நல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முகமதுஅலிபேக், தேவராஜன், ஊராட்சி தலைவர் ராமையா ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர். இப்பகுதி மக்கள் பழுதடைந்த தொகுப்பு வீடுகளை இடித்துவிட்டு புதிய தொகுப்பு வீடுகள் கட்டித்தர கோரிக்கை வைத்துள்ளனர்.