ஆயுதங்களுடன் இருதரப்பினர் மோதல்; 3 பேர் படுகாயம்


ஆயுதங்களுடன் இருதரப்பினர் மோதல்; 3 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 15 Nov 2022 12:15 AM IST (Updated: 15 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

ஓசூரில் பயங்கர ஆயுதங்களுடன் 2 தரப்பினர் இடையே நடந்த மோதலில் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

கிருஷ்ணகிரி

ஓசூர்

ஓசூரில் பயங்கர ஆயுதங்களுடன் 2 தரப்பினர் இடையே நடந்த மோதலில் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

தகராறு

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் கொத்தூர் சாலையில் உள்ள ஒரு ஹாலில் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட தமிழக மக்கள் ஜனநாயக கட்சி மற்றும் பழனிபாபா பேரவை சார்பில் அவரது வரலாற்றை விளக்கும் பொதுக்கூட்டம் நேற்று நடந்தது. இதில் 250-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தை தொடர்ந்து சாப்பிட செல்லும் நேரத்தில் ஓசூர் ராம் நகரை சேர்ந்த தாஜ் (வயது 22), இமாம்பாடாவை சேர்ந்த மகபூப் (30) ஆகிய 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதுகுறித்து தாஜ் தனது நண்பர்களுக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்தார்.

3 பேர் படுகாயம்

இதையடுத்து அவர்கள் அரிவாள், கத்தி, உருட்டு கட்டை உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் அங்கு வந்து மகபூப்பை சரமாரியாக தாக்கினர். அப்போது, மகபூப் உடன் வந்தவர்கள், ஆயுதங்களை பறித்து தாஜ் தரப்பினரை பதில் தாக்குதல் நடத்தினர். இதனால் அந்த பகுதியே போர்க்களம் போல காட்சி அளித்தது.

இந்த மோதலில் 2 தரப்பினரும் தாஜ், அவரது நண்பர் பவன் பிரகாஷ் (21), மகபூப் ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்தனர். அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இவர்களில் தாஜ் மேல் சிகிச்சைக்காக பெங்களூரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். பவன் பிரகாஷ் ஓசூரில் உள்ள தனியார் மருத்துவமனையிலும், மகபூப், மத்திகிரி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

பரபரப்பு

இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஓசூர் டவுன் மற்றும் மத்திகிரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அவர்கள் சம்பவம் குறித்து விசாரணை நடத்தினார்கள். மோதலுக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. 2 தரப்பிலும் காயமடைந்தவர்கள் படுகாயங்களுடன் இருப்பதால் முழு விவரங்களும் தெரியவில்லை.

இந்த மோதல் சம்பவம் நடந்த இடம் ஓசூர் டவுன் மற்றும் மத்திகிரி ஆகிய 2 போலீஸ் நிலைய எல்லையில் வருகிறது. இது தொடர்பாக ஓசூர் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த பயங்கர சம்பவம் ஓசூரில் நேற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story