பள்ளியின் 3-வது மாடியில் இருந்து கீழே குதித்த மாணவன் படுகாயம்
ஓசூரில் பள்ளியின் 3-வது மாடியில் இருந்து கீழே குதித்த மாணவன் படுகாயம் அடைந்தான்.
ஓசூர்:
ஓசூரில், ராயக்கோட்டை ஹட்கோ பகுதியை சேர்ந்தவர் சங்கர். இவர் தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி மாலதி. இந்த தம்பதியின் மகன் ரோகித் (வயது12). இவன், ஓசூர் -தேன்கனிக்கோட்டை சாலையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறான். தீபாவளி விடுமுறை முடிந்து நேற்று மாணவன் ரோகித் பள்ளிக்கு சென்றான். பள்ளி தொடங்குவதற்கு முன்பாக 3-வது மாடியில் இருந்து திடீரென அவன் கீழே குதித்தான். இதில், படுகாயமடைந்த மாணவனை பள்ளி நிர்வாகத்தினர் மீட்டு ஓசூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் மாணவன் சேர்க்கப்பட்டான். டாக்டர்கள் பரிசோதித்தபோது மாணவனுக்கு கால் முறிவு மற்றும் கை, தாடை பகுதிகளில் எலும்பு முறிவு ஏற்பட்டு இருப்பது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து ஓசூர் டவுன் போலீசார், மாணவன் எதற்காக மாடியில் இருந்து கீழே குதித்தான் என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம், அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.