அரசு பள்ளிக்கு ரூ.2 லட்சம் சீர்வரிசை பொருட்கள்
அரசு பள்ளிக்கு ரூ.2 லட்சம் சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டது.
பார்த்திபனூர்,
பரமக்குடி ஒன்றியம் பார்த்திபனூர் அருகே பிடாரிச்சேரி கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் அங்கு படிக்கும் மாணவர்களின் நலன் கருதி பெற்றோர்களும், கிராம மக்களும் ஒன்றிணைந்து ரூ.2 லட்சம் மதிப்பிலான பீரோ, கணினி, டேபிள், சேர், குடிநீர் சுத்திகரிப்பு கருவி, விளையாட்டு உபகரணங்கள் உள்பட பல்வேறு பொருட்களை கல்வி சீர்வரிசையாக வழங்கினர். அந்த பொருட்களை கிராம மக்கள் மேள தாளங்கள் முழங்க ஊர்வலமாக கொண்டு வந்து பள்ளி தலைமை ஆசிரியர் தனபாக்கிய பூரண ஆரோக்கிய மேரியிடம் ஒப்படைத்தனர். அவர்களை தலைமை ஆசிரியர் ஆரத்தி எடுத்து வரவேற்றார். இதில் பரமக்குடி தொடக்க கல்வி மாவட்ட அதிகாரி முருகம்மாள், வட்டார கல்வி அதிகாரிகள் சுதா மதி, ரவிக்குமார், கீழத்துவல் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை ஜாக்குலின் பாத்திமா மேரி, கிராம நிர்வாக அலுவலர் ஜெகராயன் உள்பட கிராம முக்கிய பிரமுகர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர். உதவி தலைமை ஆசிரியர்கள் செல்வம், தனலட்சுமி நன்றி கூறினர்.