வைரஸ் காய்ச்சல் சிகிச்சைக்கு தனி வார்டு


வைரஸ் காய்ச்சல் சிகிச்சைக்கு தனி வார்டு
x

புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் வைரஸ் காய்ச்சல் சிகிச்சைக்கு தனி வார்டு அமைக்கப்பட்டது.

புதுக்கோட்டை

வைரஸ் காய்ச்சல்

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. காய்ச்சலால் பொதுமக்கள் பலர் பாதிப்படைந்துள்ளனர். காய்ச்சல் பரவலை தடுக்க தமிழக அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக தனி வார்டு அமைக்க உத்தரவிட்டதோடு, மருத்துவ முகாம்கள் நடத்தி காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ள அறிவுறுத்தியது. அதன் அடிப்படையில் மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகிறது.

மேலும் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் வைஸ் காய்ச்சல் உள்பட மர்ம காய்ச்சல் சிகிச்சைக்காக தனி வார்டு ஏற்படுத்தப்படுகிறது. அந்த வகையில் புதுக்கோட்டையில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வைரஸ் காய்ச்சல் சிகிச்சைக்கு தனி வார்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த வார்டானது உள் நோயாளிகள் சிகிச்சை பிரிவின் கட்டிடத்தில் முதல் தளத்தில் காய்ச்சல் தீவிர சிகிச்சை பிரிவாக அமைக்கப்பட்டுள்ளது. இதில் 30-க்கும் மேற்பட்ட படுக்கை வசதிகள் உள்ளன.

5 பேர் சிகிச்சை

இந்த வார்டில் தற்போது 5 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்கள் லேசான காய்ச்சலுடன் சிகிச்சையில் இருப்பதாகவும், நல்ல முறையில் இருப்பதாகவும் மருத்துவமனை வட்டாரத்தில் தெரிவித்தனர். மேலும் வைரஸ் காய்ச்சல் உள்பட மர்ம காய்ச்சல் சிகிச்சைக்கு தேவையான மருந்து, மாத்திரைகள் போதுமான அளவில் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக கூறினர்.

காய்ச்சல் சிகிச்சைக்கு தேவைப்பட்டால் கூடுதல் படுக்கை வசதி ஏற்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் மாவட்டத்தின் பிற பகுதிகளில் இருந்து மேல் சிகிச்சைக்காக வந்தாலும் அவர்களுக்கு சிகிச்சை அளிக்க வசதி ஏற்படுத்தப்படுகிறது.


Next Story