இந்தி திணிப்பை எதிர்த்து சட்டசபையில் தனித்தீர்மானம் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்தார்


இந்தி திணிப்பை எதிர்த்து சட்டசபையில் தனித்தீர்மானம் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்தார்
x
தினத்தந்தி 19 Oct 2022 7:00 AM IST (Updated: 19 Oct 2022 7:15 AM IST)
t-max-icont-min-icon

இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கு பேராபத்தை விளைவிக்கும் இந்தி திணிப்பை எதிர்த்து தமிழக சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனித்தீர்மானம் கொண்டு வந்தார்.

சென்னை,

சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்தி திணிப்புக்கு எதிராக தனித்தீர்மானம் கொண்டு வந்து பேசியதாவது:-

மொழி என்பது, நமது உயிராய், உணர்வாய், விழியாய், நம் அனைவரின் எதிர்காலமாய் இருக்கிறது. அத்தகைய நம் தாய் மொழியை வளர்க்கவும், பிறமொழி ஆதிக்கத்தில் இருந்து காக்கவுவே தி.மு.க. தோன்றியது. மத்திய பா.ஜ.க. அரசானது, இந்தி மொழியைத் திணிப்பதை தனது வழக்கமாகவே வைத்துள்ளது. ஆட்சி நிர்வாகத்தில் இந்தியைத் திணிப்பது தொடங்கி, கல்வி மூலமாக திணிப்பது வரை, தாங்கள் ஆட்சிக்கு வந்ததன் நோக்கமே இந்தியைத் திணிப்பதுதான் என்று நினைக்கிறார்கள்.

இந்திமொழி திணிப்பை பட்டவர்த்தனமாக பா.ஜ.க. அரசு செய்கிறது. இந்திமொழி தினம் கொண்டாடும் மத்திய அரசு, மற்ற மாநில மொழிகளின் தினம் கொண்டாடுவது இல்லை. இந்தி மொழிக்கு தரப்படும் முக்கியத்துவம் என்பது, மற்ற மொழிகளைப் புறக்கணிப்பதாக மட்டுமில்லை, அழிப்பதாகவும் அமைந்திருக்கிறது.

இந்தியை ஆட்சிமொழியாக, அலுவல் மொழியாக மட்டுமல்ல, அதிகாரம் செலுத்தும் மொழியாகவும் பா.ஜ.க. அரசு உயர்த்திக்கொண்டு இருக்கிறது. மேலாதிக்கம் செலுத்தும் மொழியாக அதனை மாற்றிக்கொண்டு இருக்கிறார்கள். இந்தியும், ஆங்கிலமும் தான் அலுவல் மொழியாக இத்தனை காலம் இருந்து வரும் நிலையில், ஆங்கிலத்தை மொத்தமாக அகற்றப்பார்க்கிறது பா.ஜ.க. அரசு.

இந்தி பேசும் மாநிலங்களில் இந்தியை வலுப்படுத்தும் போர்வையில் இந்தியா முழுவதும் இந்தியை வலுப்படுத்தவே துடிக்கிறார்கள். மாநில மொழி என்று ஒப்புக்காக சொல்கிறார்களே தவிர, முழுக்க முழுக்க இந்திக்காகவே துடிக்கிறது அவர்களது இதயம்.

மாநில மொழிகள் மீது இவர்கள் இவ்வளவு பற்று வைத்திருப்பது உண்மையானால், அரசியலமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் இடம்பெற்றுள்ள தமிழ் உள்ளிட்ட அனைத்து மொழிகளையும், இந்திக்கு இணையான மத்திய அரசின் அலுவல் மொழிகளாக அறிவிக்கத் தயாரா? என்று நான் இந்த நேரத்தில் கேட்க விரும்புகிறேன்.

தமிழ்நாட்டின் மொழி கொள்கை என்பது, தமிழும், ஆங்கிலமும் என்ற இருமொழி கொள்கை. மூன்றாம்தர குடிமக்களாக நம்மை ஆக்கிவிடப்பார்க்கும் முயற்சிகளுக்கு நாம் எதிர்க்குரல் எழுப்பிட வேண்டும். இந்திக்கு தாய்ப்பாலும், இந்தியாவின் மற்ற மொழிகளுக்கு கள்ளிப்பாலும் புகட்ட நினைப்பது, இந்திய அரசியல் சட்டத்திற்கு எதிரானது. இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கு பேராபத்தை விளைவிக்கக் கூடியது என்பதால் பின்வரும் தீர்மானத்தை நான் முன்மொழிகிறேன்:

மத்திய அரசின் உள்துறை மந்திரியாகவும், அலுவல் மொழி தொடர்பான நாடாளுமன்ற குழு தலைவராகவும் உள்ள அமித்ஷா தலைமையிலான குழு சமீபத்தில் ஜனாதிபதியிடம் அளித்துள்ள அறிக்கை இன்றைக்கு நாடு முழுவதும் விவாதத்திற்கு உள்ளாகியிருக்கிறது. குறிப்பாக, தமிழ்நாடு உள்ளிட்ட இந்தி பேசாத மாநில மக்களுக்கு பெரும் பாதிப்பினை ஏற்படுத்தும் வகையிலும், இந்த நாட்டின் பிரதமராக இருந்த நேரு அளித்த வாக்குறுதிக்கு முரணாகவும் பல பரிந்துரைகளை அளித்துள்ளது.

அந்த பரிந்துரைகளில், மத்திய அரசின் கல்வி நிறுவனங்களான ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., எய்ம்ஸ் மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் ஆங்கிலத்திற்கு பதில் இந்தி மொழியே பயிற்று மொழியாக இருக்க வேண்டும், இந்தியை பொது மொழியாக்கிடும் வகையில், தொழில்நுட்ப மற்றும் தொழில்நுட்பம் சாராத கல்வி நிறுவனங்கள், கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் உள்ளிட்ட மத்திய அரசின் அனைத்து கல்வி நிறுவனங்களிலும் இந்தி மொழியே பயிற்று மொழியாக ஆக்கப்பட வேண்டும், இளைஞர்களின் வேலைவாய்ப்பில், கட்டாயத் தாள்களில் ஆங்கிலத்தை நீக்கி விட்டு, இந்தியை மட்டுமே முதன்மைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்டவையும் அடங்கும்.

இப்படி ஆங்கிலத்தைப் புறந்தள்ளி, அரசமைப்பு சட்டத்தின் 8-வது அட்டவணையில் உள்ள இந்தி பேசாத மாநில மக்களின் 22 மாநில மொழிகளையும் அடியோடு ஒதுக்கி வைத்து, எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கும் வகையில், அரசமைப்பு சட்டத்தின் கூட்டாட்சி கொள்கைகளுக்கு எதிரான, நம் நாட்டின் பன்மொழிக் கட்டமைப்பிற்கு தீங்கு விளைவிக்கும் வகையில் அளிக்கப்பட்டுள்ள இந்த பரிந்துரைகளை ஏற்கக்கூடாது, நடைமுறைபடுத்தக் கூடாது என பிரதமருக்கு 16-10-2022 அன்று தமிழக அரசால் கடிதம் எழுதப்பட்டுள்ளது.

இந்த மாபெரும் அவையில் அண்ணா கொண்டு வந்து நிறைவேற்றிய இரு மொழி கொள்கை தீர்மானத்திற்கு எதிராக, பிரதமராக இருந்த நேரு இந்தி பேசாத மாநிலங்களுக்கு அளித்த வாக்குறுதிக்கு மாறாக, 1968 மற்றும் 1976-ம் ஆண்டுகளில் அலுவல் மொழி தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மற்றும் அதன் அடிப்படையில், ஆங்கில மொழி பயன்படுத்துவது உறுதி செய்யப்பட்டுள்ளதற்கும் எதிராக, இப்போது அளிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற குழுவின் பரிந்துரைகள் அமைந்திருப்பது கவலைக்குரியதாக இப்பேரவை கருதுகிறது.

அன்னைத் தமிழ்மொழியைக் காத்திட, ஆங்கிலம் அலுவல் மொழியாக தொடர்ந்திட, ஏன் அரசமைப்பு சட்டத்தின் 8-வது அட்டவணையில் உள்ள 22 மொழிகளையும் அழியாது காத்திட, இந்தி பேசாத மாநில மக்களின் உரிமைகளை நிலைநாட்டிட தமிழ்நாடு மீண்டும் முன்னோடி மாநிலமாக நின்றிடும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

அலுவல் மொழி தொடர்பான நாடாளுமன்ற குழு தலைவரால் கடந்த 9-9-2022 அன்று ஜனாதிபதியிடம் அளிக்கப்பட்டுள்ள அறிக்கையில், தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளுக்கும், அம்மொழிகளைப் பேசும் மக்களின் நலனுக்கு எதிராகவும் வழங்கப்பட்டுள்ள பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த கூடாது என மத்திய அரசினை இந்த பேரவை வலியுறுத்துகிறது.

பேரவையில் இருமொழி கொள்கையை நிறைவேற்றிய அண்ணாவின் அதே உணர்வுடன், இந்த தீர்மானத்தைத் தற்போது முன்மொழிந்துள்ளேன். அனைவரும் இந்த தீர்மானத்தை ஒருமனதாக நிறைவேற்றித் தருமாறு கேட்டு கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதைத்தொடர்ந்து இந்த தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது. இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக அனைத்து கட்சி உறுப்பினர்களும் வரவேற்று பேசினர். இந்த தீர்மானத்திற்கு எதிராக பா.ஜ.க. வெளிநடப்பு செய்தது.


Next Story