முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் செந்தில் பாலாஜி சந்திப்பு
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை செந்தில் பாலாஜி சந்தித்தார்.
சென்னை,
சட்டவிரோத பணபரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சுப்ரீம் கோர்ட்டு நேற்று ஜாமீன் வழங்கியது. இதையடுத்து 471 நாட்கள் புழல் சிறையில் இருந்த செந்தில் பாலாஜி நேற்று வெளியே வந்தார்.
இதனை தொடர்ந்து நேற்று மாலை அண்ணா, கலைஞர் நினைவிடங்களுக்கு நேரில் சென்ற செந்தில் பாலாஜி அங்கு மரியாதை செலுத்தினார். இதன் பின்னர், சுப்ரீம் கோர்ட்டு விதித்த நிபந்தனைகளின்படி இன்று காலை அமலாக்கத்துறை முன் ஆஜரான செந்தில் பாலாஜி பதிவேட்டில் கையெழுத்திட்டார்.
இதனிடையே, டெல்லி சென்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பிரதமர் மோடியை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. டெல்லி பயணத்தை முடித்துக்கொண்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை சென்னை திரும்பினார்.
இந்நிலையில், சென்னை திரும்பிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை செந்தில் பாலாஜி நேரில் சந்தித்தார். சென்னை விமான நிலையத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது.
டெல்லி பயணத்தை முடித்துக்கொண்டு சென்னை திரும்பிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை மூத்த அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்பட பலர் விமான நிலையத்திற்கு நேரில் சென்று வரவேற்றனர். அப்போது, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த செந்தில் பாலாஜி அவரிடம் வாழ்த்து பெற்றார்.