ரூ.1 கோடிக்கு காய்கறிகள், பழங்கள் விற்பனை
பொங்கல் பண்டிகையையொட்டி உழவர் சந்தைகளில் ரூ.1 கோடிக்கு காய்கறிகள், பழங்கள் விற்பனையானது.
பொங்கல் பண்டிகையையொட்டி உழவர் சந்தைகளில் ரூ.1 கோடிக்கு காய்கறிகள், பழங்கள் விற்பனையானது.
உழவர்சந்தைகள்
சேலம் மாநகரில் சூரமங்கலம், அஸ்தம்பட்டி, தாதகாப்பட்டி, அம்மாப்பேட்டை மற்றும் புறநகரில் மேட்டூர், இளம்பிள்ளை, ஆட்டையாம்பட்டி, தம்மம்பட்டி, எடப்பாடி, ஆத்தூர், ஜலகண்டாபுரம் ஆகிய 11 உழவர் சந்தைகள் உள்ளன. இந்த சந்தைகளில் நேற்று வழக்கத்தைவிட பொங்கல் பண்டிகைக்கு காய்கறிகள் விற்பனை அதிகமாக நடைபெற்றது.
பொங்கல் வைப்பதற்கு தேவையான காய்கறிகள், பழங்கள், கிழங்கு வகைகளை பொதுமக்கள் அதிகளவில் வாங்கி சென்றனர். ஒருசிலர் அதிகாலையில் உழவர் சந்தைக்கு வந்து பொருட்களை வாங்கி சென்றனர். கத்தரிக்காய், புடலைங்காய், தக்காளி, வாழைக்காய், சேனை கிழங்கு, கருணை கிழங்கு, உருளை, கேரட், பீன்ஸ், சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம், முருங்கைக்காய் உள்ளிட்ட பல்வேறு காய்கறிகள் விற்பனை மும்முரமாக நடந்தது.
ரூ.1 கோடி
சேலம் மாநகரில் உள்ள 4 உழவர் சந்தைகளிலும் நேற்று மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. மாவட்டத்தில் அதிகமாக சூரமங்கலம் உழவர் சந்தையில் ரூ.18 லட்சத்து 22 ஆயிரத்து 900-க்கும், அஸ்தம்பட்டி உழவர் சந்தையில் 8 லட்சத்து 53 ஆயிரத்து 930-க்கும், அம்மாப்பேட்டை உழவர் சந்தையில் ரூ.7 லட்சத்து 59 ஆயிரத்து 975-க்கும், தாதகாப்பட்டி உழவர் சந்தையில் ரூ.14 லட்சத்து 72 ஆயிரத்து 593-க்கும் என மாவட்டம் முழுவதும் உள்ள 11 உழவர் சந்தைகளில் நேற்று ஒரேநாளில் ரூ.1 கோடியே 7 லட்சத்து 69 ஆயிரத்து 260-க்கு காய்கறிகள், பழங்கள் விற்பனை நடந்தது.
1,112 விவசாயிகள் 24 டன் காய்கறிகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். சுமார் 65 ஆயிரம் நுகர்வோர்கள் காய்களை வாங்கி சென்றனர்.