பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு போதை மாத்திரை விற்பனை
மதுரையில் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு போதை மாத்திரை விற்ற கடைக்காரர் கைது செய்யப்பட்டார்.
மதுரையில் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு போதை மாத்திரை விற்ற கடைக்காரர் கைது செய்யப்பட்டார்.
போதை மாத்திரை விற்பனை
மதுரை காமராஜர் சாலையில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் சிலர் போதை மாத்திரைகள் பயன்படுத்துவதாக தெப்பக்குளம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில் காமராஜர் சாலையில் உள்ள ஒரு மருந்து கடையில் போதை மாத்திரைகள் விற்கப்படுவது தெரிய வந்தது. உடனே போலீசார் அந்த கடையில் அதிரடி சோதனை நடத்தினார்கள்.
அதில் மாணவர்கள் பயன்படுத்திய வகையை சேர்ந்த போதை மாத்திரைகள் அங்கு இருப்பதை கண்டுபிடித்தனர். மருந்து கடை உரிமையாளர் தங்கராஜ் (வயது 38) என்பவரை பிடித்து விசாரித்தனர். அதில் டாக்டர்கள் பரிந்துரை இல்லாமலேயே, நரம்பியல் மாத்திரைகள் மற்றும் தூக்க மாத்திரைகள், போதை மாத்திரைகளை போதைக்காக விற்பனை செய்தது தெரியவந்தது.
மருந்துக்கடை உரிமையாளர் கைது
பின்னர் போலீசார் மருந்துகட்டுப்பாட்டு அதிகாரி முன்னிலையில் கடையில் சோதனை மேற்கொண்டு அங்கிருந்து தூக்க மாத்திரைகள் மற்றும் போதை மாத்திரைகளை கைப்பற்றினர். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மருந்துக்கடை உரிமையாளர் தங்கராஜை கைது செய்தனர்.
இதுதொடர்பாக போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும் போது, கொலை வழக்கு தொடர்பாக புறநகர் பகுதியில் சிலரை பிடித்தோம். அப்போது அவர்கள் போதை மயக்கத்தில் இருந்தனர். அவர்கள் எந்த வகையான போதை பொருளை உட்கொண்டார்கள்? என்று விசாரித்த போது போதை மாத்திரை சாப்பிட்டது தெரியவந்தது.
இது தொடர்பாக விசாரித்த போது மேற்கண்ட கடையில் எவ்வித மருத்துவ சீட்டும் இல்லாமல் சிறுவர்களுக்கு இந்த மாத்திரை வழங்கியதை கண்டுபிடித்தோம். நோய் இல்லாத ஒருவர் இந்த மாத்திரைகளை பயன்படுத்தும் போது, சம்பந்தப்பட்டவருக்கு அளவுக்கு மீறிய தூக்கம், மெய்மறந்த நிலை ஆகியவை ஏற்படும். அதே நேரத்தில் இந்த மாத்திரைகள் உயிருக்கு ஆபத்தானவை.
இந்த மாத்திரைகளை ஒருவர் அளவுக்கு அதிகமாக தொடர்ந்து பயன்படுத்தினால் அவருக்கு சிறுநீரக கோளாறு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் ஏற்படும். விலை குறைவாகவும், வாயில் எந்தவித வாசனையும் வராமல் இருப்பதால் அதை சிறுவர்கள் மற்றும் குற்றவாளிகள் பயன்படுத்தி வருவது தெரியவந்தது. மேலும் இவரது கடையில் இருந்து தான் புறநகர் பகுதியில் உள்ள மருந்து கடைக்காரர்களும், அந்த ரக மாத்திரைகளை வாங்கி விற்றதும் கண்டுபிடிக்கப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.