ஒரு கிலோ ரூ.160-க்கு விற்பனை இல்லத்தரசிகளின் கண்களில் கண்ணீரை வரவழைத்த சின்ன வெங்காயம் விலை


ஒரு கிலோ ரூ.160-க்கு விற்பனை இல்லத்தரசிகளின் கண்களில் கண்ணீரை வரவழைத்த சின்ன வெங்காயம் விலை
x

சின்ன வெங்காயம் ஒரு கிலோ ரூ.160-க்கு விற்பனை ஆனது. இது இல்லத்தரசிகளின் கண்களில் கண்ணீரை வரவழைக்கும் அளவுக்கு உள்ளது. இதேபோல் இஞ்சி விலை முச்சதம் அடித்துவிற்பனையானது.

ஈரோடு

சின்ன வெங்காயம் ஒரு கிலோ ரூ.160-க்கு விற்பனை ஆனது. இது இல்லத்தரசிகளின் கண்களில் கண்ணீரை வரவழைக்கும் அளவுக்கு உள்ளது. இதேபோல் இஞ்சி விலை முச்சதம் அடித்துவிற்பனையானது.

காய்கறி விலை உயர்வு

ஈரோடு வ.உ.சி. பூங்கா மைதானத்தில் நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு 800-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. ஈரோட்டை சேர்ந்த வியாபாரிகள், பொதுமக்கள் மட்டுமின்றி நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியை சேர்ந்தவர்கள் இங்கு வந்து காய்கறியை வாங்கிச்செல்கிறார்கள். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், ஆந்திரா, கர்நாடகா போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும் இங்கு காய்கறி விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. கடந்த சில நாட்களாக காய்கறி வரத்து குறைந்ததன் எதிரொலியாக விலை உயர்ந்து வருகிறது. பீன்ஸ், பச்சை மிளகாய், கருணை கிழங்கு உள்ளிட்ட காய்கறி விலை சதத்தை கடந்து விற்பனையாகி வருகிறது.

சின்ன வெங்காயம்

இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சின்ன வெங்காயம் விலை சதத்தை கடந்தது. நேற்று முன்தினம் ஒரு கிலோ ரூ.130-க்கு விற்பனை செய்யப்பட்ட சின்னவெங்காயம் நேற்று மேலும் ரூ.30 விலை உயர்ந்து ரூ.160-க்கு விற்பனை செய்யப்பட்டது. பொதுவாக சின்னவெங்காயத்தை உரித்தால் தான் இல்லத்தரசிகளின் கண்களில் கண்ணீர் வரும். ஆனால் தற்போது சின்ன வெங்காயத்தின் விலையை கேட்டாலே இல்லத்தரசிகளுக்கு கண்களில் கண்ணீர் வருகிறது. இதேபோல் இஞ்சி விலையும் நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று முன்தினம் ரூ.280-க்கு விற்பனையான ஒரு கிலோ இஞ்சி நேற்று முச்சதம் அடித்து ரூ.300-க்கு விற்பனையானது.

ஈரோடு மார்க்கெட்டில் நேற்று விற்பனையான காய்கறி விலை கிலோவில் வருமாறு:-

பெரிய வெங்காயம் -ரூ.30, சின்ன வெங்காயம் -ரூ.160, தக்காளி -ரூ.100, கத்தரிக்காய் -ரூ.60, கேரட் -ரூ.80, பீன்ஸ் -ரூ.120, வெண்டைக்காய் -ரூ.40, பீர்க்கங்காய் -ரூ.60, குடை மிளகாய் -ரூ.80, பச்சை மிளகாய் -ரூ.120, இஞ்சி -ரூ.300, புடலங்காய் -ரூ.40, பாகற்காய் -ரூ.60, கொத்தவரங்காய் -ரூ.40, முருங்கைக்காய் -ரூ.50, கோவக்காய் -ரூ.40, அவரைக்காய் -ரூ.60, கருணை கிழங்கு -ரூ.120, பூசணிக்காய் -ரூ.30.


Related Tags :
Next Story