உயிர் பறிக்கும் 'செல்பி' மோகம் ஆர்வத்தால் ஆபத்தைத் தேடும் இளைஞர்கள்


உயிர் பறிக்கும்   செல்பி மோகம்   ஆர்வத்தால் ஆபத்தைத்   தேடும் இளைஞர்கள்
x
தினத்தந்தி 14 Dec 2022 12:15 AM IST (Updated: 14 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

‘செல்பி’ ஆர்வத்தால் இளைஞர்கள் ஆபத்தைத் தேடிவருகிறாா்கள்.

விழுப்புரம்



ஒரு நேரத்தில் புகைப்படங்கள் எடுக்கும் 'காமிரா'க்கள் அரிதாகப் பார்க்கப்பட்டன. புகைப்படக் கலைஞர்கள் பெரிதாகப் பார்க்கப்பட்டனர்.

இன்று தொழில்நுட்பப் புரட்சியால் செல்போன்கள் வைத்து இருப்பவர்கள் அனைவருமே புகைப் படக்காரர்கள்தான். ஐந்து வயது குழந்தைகூட ஒரு காட்சியை செல்போனில் படம் எடுத்துவிட முடிகிறது. செல்போன்கள் மூலம் படம் எடுக்கிற மோகம் பெரியவர் முதல், சிறியவர் வரை யாரையும் விட்டுவைக்கவில்லை.

'செல்பி' மோகம்

அதிலும் செல்போனில் 2 பக்கமும் படம்பிடிக்கிற காமிரா வசதி, என்று வந்ததோ அன்று முதல் சுயமாக நம்மைப் படம் எடுத்துக் கொள்கிற 'செல்பி' என்கிற மோகம் ஒவ்வொருவரையும் தொற்றிக் கொண்டுவிட்டது.

திருமண விழாக்களில் மணமக்களுடன் இணைந்து 'செல்பி', பொது இடங்களில் பிரபலங்களை கண்டுவிட்டால் ஆர்வத்தில் அவர்களுடன் 'செல்பி', சுற்றுலாத் தலங்களுக்கு சென்றால் இயற்கை எழில்மிகு காட்சிகளுடன் 'செல்பி', ஏன்? உயிரிழந்த சடலங்கள் முன்பு இருந்துகூட 'செல்பி' எடுக்கிற அளவில் 'செல்பி' இன்று அதுவும் இளைய தலைமுறையினரை ஆட்டுவித்து வருகிறது.

புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு அதிகம் 'லைக்ஸ்' பெற வேண்டும் என்ற ஆசையில், ஆர்வத்தில் ஆபத்தான இடங்களில் 'செல்பி' எடுப்பதை இளைஞர்கள் விரும்புகிறார்கள்.

உயிருக்கு உலை

இவ்வாறாய் ஓடும் ரெயில் முன்பு, பாறையின் மேல் நின்று, புயல் வெள்ளம் போன்ற இயற்கைச் சீற்ற காலங்களில் ஆபத்தான இடங்களில் நின்று செல்பி எடுக்க முயன்று பல உயிர்கள் பறிபோய் இருக்கின்றன. இருந்தும் மக்களிடையே 'செல்பி' மோகம் குறைந்தப்பாடில்லை. சில தினங்களுக்கு முன்பு கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் 150 அடி உயரப் பாறையின் மேல் நின்று மணப்பெண் ஒருவர் 'செல்பி' எடுக்க முயன்றபோது கால் தவறி கல்குவாரி தண்ணீரில் விழுந்து உயிருக்கு போராடினார். அவரை சினிமா கதாநாயகன் போல் மணமகன் தனது உயிரைத் துச்சமென நினைத்து கீழே குதித்து காப்பாற்றினார்.

இந்தச் சம்பவம் ஆபத்தான இடங்களில் 'செல்பி' எடுப்பதால் ஏற்படும் விபரீதத்தை எடுத்துக் காட்டும் எச்சரிக்கையாக அமைந்தது.

உயிருக்கு உலை வைக்கும் இதுபோன்ற ஆபத்தை விளைவிக்கும் 'செல்பி' மோகம், இளைஞர்களிடம் குறையுமா ? என்பது பற்றிய பல்வேறு தரப்பினரின் கருத்துகள் வருமாறு:-

போதைப் பழக்கம் போன்று...

திரைப்பட நடிகை கஸ்தூரி:-

எல்லோரது வாழ்க்கையிலும் செல்போன் இப்போது நீக்கவே முடியாத அங்கமாகிவிட்டது. ஒரு காலத்தில் செல்போன் நம்மிடம் இல்லை. இப்போது செல்போன் இல்லாமல் நாமே இல்லை. செல்போன் இல்லாத காலம் என்பது இனி நினைவில் இருக்கவும் போவதில்லை.

செல்போன் நல்லதா, கெட்டதா? 'செல்பி' என்பது நல்லதா, கெட்டதா? என்பதை யோசிக்கும் காலத்தை நாம் எப்போதோ தாண்டிவிட்டோம். அது பற்றிய யோசனைகளை கடந்து, தற்போது செல்போனுடன் வாழப் பழகிவிட்டோம். செல்போன் பயன்பாடு என்பதும், 'செல்பி' எடுப்பதும் என்பதும் அவரவர் நாரிகத்தைப் பொறுத்த விஷயமாகும். 'செல்பி' என்ற விஷயம், இப்போது மூச்சுக்காற்று போல பரவலாகி விட்டது. வாழ்க்கையின் ஒரு அங்கமாகிவிட்டது. 'செல்பி' எடுப்பதை தவறு என்று சொல்லவே மாட்டேன். ஆனால் அதன் போக்கு மாறிவிடக்கூடாது. அதை மட்டும் உறுதியாகச் சொல்வேன்.

உளவியல் நிபுணர் சித்ரா அரவிந்த்:-

'செல்பி' எடுக்கும் பழக்கத்துக்கு இளைய தலைமுறையினர் பலர் அடிமையாகி உள்ளனர். சமுதாயத்தில் தனக்கு என்று ஒரு அங்கீகாரம் மற்றும் அடையாளத்தை தேடிச் செல்பவர்களே சமூக ஊடகங்களில் கிடைக்கும் வெறும் 'லைக்', 'ஷேர்', 'கமென்ட்' போன்றவற்றுக்காக ஆபத்தை உணராமல் விபரீதமான முறையில் 'செல்பி' எடுக்கிறார்கள்.

மற்றவர்களிடம் இருந்து வேறுபட்டு, எல்லோரையும் விடவும் வித்தியாசமாக இருக்கவேண்டும். அனைவரின் பார்வையும் நம் மீது திரும்பி உடனடியாகப் பிரபலமாக வேண்டும் என்ற நோக்கத்தில் இது போன்ற செயல்களில் ஆபத்தை உணராமல் ஈடுபடுகிறார்கள். செல்பிக்காக உயிரை இழப்பது என்பது நமக்கு விடுக்கப்பட்டிருக்கும் எச்சரிக்கை மணி. எனவே இந்த மோகத்துக்கு அடிமையாகாமல் இருப்பதற்கு சுய கட்டுப்பாடுடன் இருக்கவேண்டும்.

தங்கள் பிள்ளைகளின் செல்போன்களை பெற்றோர் தொடர்ச்சியாக கண்காணித்து, அந்த பழக்கத்தில் இருந்து விடுபடுவதற்கு தேவையான அறிவுரைகளை அவ்வப்போது வழங்கவேண்டும். செல்பி மோகத்தில் இருந்து விடுபடவேண்டும் என்றால், தங்களுடைய எண்ணத்தையும், சிந்தனையையும் வேறு பல நல்ல வழிகளில் ஆக்கப் பூர்வமாக பயன்படுத்தவேண்டும். ஆபத்தை தேடிச்செல்லக்கூடாது.

தவறான பாதைக்கு அழைக்கிறது

திண்டிவனம் ரோஷனையை சேர்ந்த வக்கீல் சக்கரவர்த்தி:-

இன்றைக்கு இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவரிடமும் செல்பி மோகம் ஏற்பட்டுள்ளது. சுற்றுப்புறத்தில் என்ன நடக்கிறது என்பதை கவனிக்காமல் செல்பி எடுப்பது ஆபத்தை விளைவிக்கிறது. மழைக்காலங்களில் நீர்நிலைகள், ஆற்றுப்பகுதியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடும்போதும் பல பேர் செல்பி எடுக்கும் ஆர்வத்தில் தங்களது உயிரை இழந்துள்ளனர். அதுபோல் ரெயில், பஸ் போன்றவைகளில் பயணம் செய்யும்போது படிக்கட்டில் நின்றுகொண்டு செல்பி எடுக்கிறார்கள்.

இதுபோன்று ஆபத்தான செல்பி எடுக்கும்போது கால் தவறியும் கை நழுவியும் விழுந்து பலர் காயமடைந்துள்ளனர், சிலர் இறந்துள்ளனர்.

சமீபத்தில்கூட கல்லூரி மாணவிகள் 4 பேர், ரெயிலின் படிக்கட்டில் நின்றுகொண்டு செல்பி எடுத்தது வைரலாகி உள்ளது. தற்போது செல்பி எதை எடுப்பது என்று இல்லாமல்‌ மருத்துவமனையில் அறுவை சிகிச்சையின்போது கூட செல்பி எடுக்கிறார்கள். செல்பி மோகம் இளைஞர்களை தவறான பாதைக்கு அழைத்து செல்கிறது. ஆபத்தான செல்பி எடுக்கும்போது பாதிப்பு ஏற்படும் என தெரிந்தே உயிரை பணயம் வைத்து பல பேர் செல்பி எடுப்பது கண்டிக்கத்தக்கது. தங்களுடைய உயிரை பணயம் வைத்து செல்பி எடுக்கும் நிலையை மாற்றிக்கொள்ள வேண்டும்.

ஒருவித மனநோய்

விழுப்புரத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் செங்குட்டுவன்:-

செல்போன்களின் வருகை என்பது ஒவ்வொருவரையும் புகைப்பட கலைஞராக்கியுள்ளது. இது நல்லதுதான். அதேநேரம் இந்த பயன்பாட்டின் உச்சக்கட்டம் செல்பி எனும் மோகத்திற்கு சமூகத்தை இழுத்துச்சென்றுள்ளது. இது சில நேரங்களில் சுகமான அனுபவத்தை கொடுத்தாலும் பல நேரங்களில் சோகமான அனுபவங்களை கொடுத்து வருகிறது என்பதுதான் உண்மை. தங்களை தாங்களே புகைப்படம் எடுத்துக்கொள்ளும் இப்படியான செய்கை ஒருவித மனநோய் என்கின்றனர் மருத்துவர்கள். இத்தகைய மனநோயில் இருந்து பொதுமக்கள் குறிப்பாக இளைஞர்கள் விடுபட வேண்டும்.

தாங்களாகவே குறைக்க வேண்டும்

செஞ்சி அருகே கீழ்பாப்பாம்பாடியை சேர்ந்த வெங்கடேசன்:-

செல்போன் கேமரா என்பது அவசியம்தான். ஆனால் செல்பி என்பது அவசியமில்லை. செல்பியால் பல உயிர்களை பறிகொடுத்து இருக்கின்றோம். குடும்பத்தாருடன் திருமண நிகழ்ச்சிகள், குடும்ப விசேஷங்களில் செல்பி புகைப் படங்கள் எடுத்தால் நன்றாக இருக்கும். ஆனால் தனியாக வெளியே செல்பவர்கள் புகைப்படம் எடுப்பதற்காக மலைப்பிரதேசங்கள், ஆறுகள், கிணறுகள் போன்ற இடங்களில் நின்றுகொண்டு செல்பி எடுக்கிறோம் என்ற பெயரில் விபத்து நடைபெறுகிற சூழ்நிலை உருவாகிறது. ஆகையால் இந்த செல்பி மோகத்தை பொதுமக்கள் தாங்களாகவே குறைத்தால் மட்டுமே உயிர் பலிகளை தவிர்க்க முடியும்.

புகைப்பட தொழில் பாதிப்பு

விழுப்புரத்தை சேர்ந்த வீடியோ புகைப்பட கலைஞர் வேல்முருகன்:-

புதுப்புது மாடல்களில் விலை உயர்ந்த செல்போன்கள் வரவு மற்றும் அதன் அதீத பயன்பாடு தற்போது பொதுமக்களிடையே அதிகரித்துள்ளது. இதன் விளைவால் சுபநிகழ்ச்சிகளில் புகைப்படம், வீடியோ எடுக்கும் எங்களைப்போன்றவர்களின் தொழில் பெரிதும் பாதிப்படைந்துள்ளது. முன்பெல்லாம் எளிமையாக நடைபெறும் திருமண விழா, குழந்தைகளின் பெயர்சூட்டு விழா, மஞ்சள் நீர், வளைகாப்பு விழா போன்ற எந்தவொரு சுப நிகழ்ச்சிகளாக இருந்தாலும் அதில் எங்களது பங்கு முக்கிய இடம் வகிக்கும். தற்போதெல்லாம் செல்போன்களின் வரவால் எங்கள் தயவின்றி அவர்களாகவே புகைப்படம், வீடியோ எடுத்துக்கொள்கின்றனர்.

அதுபோல் முன்பு அரசியல் கட்சியினர், அவர்கள் சார்ந்த கட்சிகளின் தலைவர்கள், அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்களின் பிறந்த நாள் நிகழ்ச்சி, கட்சி நிகழ்ச்சிகளில் எங்களை அழைத்து புகைப்படம் எடுக்கச்சொல்லி ஏ3, ஏ4 அளவு பிரிண்ட் போட்டு லேமினேஷன் செய்து கொடுக்குமாறு கேட்பார்கள். தற்போதெல்லாம் அந்த நிலை மாறிவிட்டது. நாங்கள் எடுக்கும் புகைப்படங்களை வாங்குவதில்கூட அவர்கள் ஆர்வம் செலுத்துவதில்லை, கேட்டால் வாட்ஸ்- அப்பில் போட்டோ, வீடியோ அனுப்பச்சொல்கிறார்கள்.

செல்போன்களின் பயன்பாடு அதிகரித்ததில் இருந்து புகைப்பட வீடியோ தொழில் முற்றிலும் நலிவடைந்து வருகிறது. ஒருகாலத்தில் வாடிக்கையாளர்களே, சுப நிகழ்ச்சிகளுக்கு எங்களைத்தேடி வந்து ஆர்டர் கொடுத்த காலம் மாறி தற்போது ஆர்டருக்காக நாங்கள் அவர்களை தேடிச்செல்ல வேண்டிய நிலையுள்ளது.

முன்பு மாதத்துக்கு 10 ஆர்டர்கள் வந்த இடத்தில் தற்போது செல்போன்களின் பயன்பாட்டினால் 2, 3 ஆர்டர் வருவதே பெரிய விஷயமாக இருக்கிறது. இதனால் எங்களைப்போன்றவர்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளோம்.

அடிமையாக கூடாது

கள்ளக்குறிச்சி அருகே தனியார் கல்லூரியில் எம்.ஏ. தமிழ் படித்து வரும் எலியத்தூர் கிராமத்தை சேர்ந்த மாணவி சுபலட்சுமி:-

நாட்டில் தற்போது செல்போன் மூலம் செல்பி எடுப்பது அதிகரித்து வருகிறது. பைக் ரேஸ் செல்பவர்கள் மற்றும் இளைஞர்கள், இளம்பெண்கள் நீர் நிலைகள், நீர்வீழ்ச்சி ஓரம், மலைகளின் இடுக்குகள், மலை உச்சியில் செல்பி எடுக்கும் போது ஏராளமான உயிர்கள் பலியாகி வருகிறது. செல்பி மோகத்தால் கடந்த 2018-ம் ஆண்டில் 259 பேரும், 2021-ம் ஆண்டு 379 பேரும் உயிரிழந்துள்ளனர். கடந்த 2015-ம் ஆண்டு கேரளாவில் நின்று கொண்டிருந்த ரெயில் மேலே ஏறி 14 வயது சிறுவன் செல்வி எடுத்தபோது மின்சாரம் தாக்கி உயிரிழந்தான்..அதேபோல் மும்பை-கோவா செல்லும் ரெயில் மேலே செல்பி எடுத்தவர் கீழே விழுந்து உயிரிழந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சட்டீஸ்கர் மாநிலத்தில் சுற்றுலா சென்ற 2 பேர் நீர்வீழ்ச்சி பகுதியில் செல்பி எடுத்தபோது, தவறி தண்ணீரில் விழுந்து விட்டனர். அவர்களை காப்பாற்ற முயன்ற அவரது உறவினர்கள் 4 பேரும் உயிரிழந்தனர். எனவே செல்பி மோகத்திற்கு யாரும் அடிமையாகி விடக்கூடாது.

மகிழ்ச்சி தரக்கூடிய செல்பி

சின்னசேலத்தைச் சேர்ந்த எம்.ஏ. படிக்கும் கல்லூரி மாணவி சரண்யா:-

ஆபத்தான இடங்களில் செல்பி எடுக்கக் கூடாது. தஞ்சை பெரியகோவிலில் உள்ள அழகான சிற்பங்களோடும், கண்ணகி சிலை மற்றும் உலக அதிசயமான தாஜ்மஹால், அண்ணா நூற்றாண்டு நூலகம் மற்றும் பூங்காங்கள், பழமை வாய்ந்த கோவில், நம்முடன் படிக்கும் சக மாணவி, மாணவர்களுடன் செல்பி எடுத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி மகிழ்கிறோம். அதேபோல் நாம் செல்பி எடுத்து அனுப்பும்போது நாம் இந்த இடத்தில் இருக்கிறோம் என தெரிந்து கொள்ளவும் உதவியாக இருக்கிறது. ஆனால் இப்படி நமக்கு மகிழ்ச்சியை தரக்கூடிய செல்பி பல உயிர்களையும் பலி வாங்குகிறது. செல்பி மோகத்தால் பலர் உயிரிழந்து வருகிறார்கள். ஆகவே பாதுகாப்பான இடங்களில் மட்டும் செல்பி எடுக்க வேண்டும். ஆபத்தான இடத்தில் எடுக்க கூடாது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story