கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க மாற்று இடம் தேர்வு


கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க மாற்று இடம் தேர்வு
x

கூடலூர் அருகே கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க மாற்று இடம் தேர்வு செய்யப்பட உள்ளது.

தேனி

கூடலூர் அருகே உள்ள கருநாக்கமுத்தன்பட்டி, ஆங்கூர்பாளையம், சுருளிப்பட்டி ஆகிய கிராம மக்களுக்கு முல்லைப்பெரியாற்றில் இருந்து நேரடியாக பம்பிங் செய்து குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்தநிலையில் கூடலூர் நகராட்சி பகுதியில் இருந்து வெளியேறும் கழிவுநீர், சுருளி அருவிக்கு செல்லும் சாலை வழியாக முல்லைப்பெரியாற்றில் கலக்கிறது. இதனால் கழிவுநீருடன் குடிநீர் கலந்து வினியோகம் செய்வதாக அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனையடுத்து கூடலூர் நகராட்சி சார்பில், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்காக, கூடலூர்-சுருளி அருவிச்சாலை சிறு வாய்க்காலின் கீழ்ப்புறமாக இடம் தேர்வு செய்யப்பட்டது. ஆனால் சிறு வாய்க்காலின் மேற்புறத்தில் சுத்திகரிப்பு நிலையத்தை அமைக்க வேண்டும் என்று கூடலூர் நகராட்சிக்கு ஆங்கூர்பாளையம் பொதுமக்கள், விவசாயிகள் கோரிக்கை மனு கொடுத்தனர்.

இதன் எதிரொலியாக, சுத்திகரிப்பு நிலையம் அமைக்க மாற்று இடத்தை தேர்வு செய்வதற்கான பணியில் வருவாய்த்துறையினர் ஈடுபட்டுள்ளனர். இந்தநிலையில் உத்தமபாளையம் ஆர்.டி.ஓ. பால்பாண்டி தலைமையில், தாசில்தார் அர்ச்சுணன், கம்பம் வருவாய் அலுவலர் நாகராஜ், கூடலூர் நகராட்சி ஆணையாளர் காஞ்சனா, நகராட்சி தலைவர் பத்மாவதி லோகந்துரை, கருநாக்கமுத்தன்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் மொக்கப்பன் ஆகியோர் மாற்று இடம் தேர்வு செய்வதற்கான ஆய்வில் நேற்று ஈடுபட்டனர். விரைவில் வேறு இடத்தை தேர்வு செய்து, கட்டுமான பணிகளை தொடங்க இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story