சேலையூர் பள்ளி பஸ் ஓட்டையில் விழுந்து சிறுமி பலியான வழக்கு: குற்றம்சாட்டப்பட்ட 8 பேரும் விடுதலை - செங்கல்பட்டு கோர்ட்டு தீர்ப்பு
தனியார் பள்ளி பஸ் ஓட்டையில் விழுந்து சிறுமி பலியான வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 8 பேரையும் விடுதலை செய்து செங்கல்பட்டு கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
சிறுமி பலி
சென்னை தாம்பரம் அடுத்த சேலையூர் இந்திரா நகரில் உள்ள தனியார் பள்ளியில் சுருதி (வயது 6) என்ற சிறுமி 2-ம் வகுப்பு படித்து வந்தார். இவர் கடந்த 2012-ம் ஆண்டு ஜூலை 25-ந் தேதி வீடு திரும்பும்போது தனியார் பள்ளி பஸ்சின் ஓட்டை வழியாக தவறி விழுந்து உயிரிழந்தார். இந்த விபத்தை நேரில் பார்த்த பொதுமக்கள் ஆத்திரமடைந்து பஸ்சுக்கு தீ வைத்தனர். இந்த விபத்து தொடர்பாக பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து பஸ் டிரைவர் சீமான், உதவியாளர் சண்முகம், மெக்கானிக் பிரகாசம், பஸ் உரிமையாளர் யோகேஷ் , பள்ளி தாளாளர் விஜயன், அவரது சகோதரர்கள் ரவி, பால்ராஜ், மோட்டார் வாகன ஆய்வாளர் ராஜசேகரன் ஆகிய 8 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சாட்சியங்கள் விசாரணை
பின்னர் 8 பேரும் ஜாமீன் பெற்று வெளியில் வந்தனர். இந்த வழக்கு தொடர்பான விசாரணை கடந்த 10 ஆண்டுகளுக்கு மேல் செங்கல்பட்டு மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அரசு தரப்பில் 35 சாட்சியங்களும், பள்ளி தரப்பில் 8 சாட்சியங்களும் விசாரிக்கப்பட்டது. இதற்கிடையே பஸ் உரிமையாளர் யோகேஷ், வட்டார போக்குவரத்து அலுவலக ஊழியர் உதவியுடன் பள்ளிகளுக்கு வழங்கப்படும் சிறப்பு சாலை வரி கட்டணத்தை பெறுவதற்காக தன் வாகனத்தை பள்ளிக்கு சொந்தமானது என போலியாக மாற்றியது விசாரணையில் தெரியவந்தது.
8 பேரும் விடுதலை
இந்நிலையில் மோசடிக்கு துணையாக இருந்த வட்டார போக்குவரத்து அலுவலக ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அனைத்து தரப்பிலும் எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் நேற்று மாவட்ட கூடுதல் அமர்வு நீதிபதி காயத்ரி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 8 பேரையும் விடுதலை செய்து தீர்ப்பளித்தார். சிறுமி பஸ் ஓட்டையில் விழுந்து உயிரிழந்த சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் சுருதியின் பெற்றோர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர். தீர்ப்பு பற்றிய முழு விவரங்கள் அடங்கிய நகல் கிடைத்தவுடன் வக்கீல்களுடன் கலந்து பேசி அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சுருதியின் தந்தை சேது மாதவன் தெரிவித்தார்.