கேரளாவில் இருந்து கழிவுகள் ஏற்றி வந்த லாரி பறிமுதல்; தந்தையுடன் டிரைவர் கைது
ஆலங்குளம் அருகே, கேரளாவில் இருந்து கழிவுகள் ஏற்றி வந்த லாரி பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக தந்தையுடன் டிரைவர் கைது செய்யப்பட்டார்.
ஆலங்குளம்:
ஆலங்குளம் அருகே சிவலார்குளம் காட்டுப்பகுதியில், மனித உயிருக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய கழிவுகள் கேரளாவில் இருந்து லாரியில் கொண்டு வரப்பட்டுள்ளதாக மாறாந்தை சுகாதார ஆய்வாளர் ராஜநயினாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அவர் அங்கு சென்று ஆய்வு செய்தார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த லாரியில் பேக்கரி கழிவுகள், பிளாஸ்டிக் சீட்கவர் உள்ளிட்ட சுமார் 10 டன் எடை கொண்ட கழிவுகள் கொட்டுவதற்காக கொண்டு வரப்பட்டது தெரியவந்தது.
இதுகுறித்து சுகாதார ஆய்வாளர் கொடுத்த புகாரின் பேரில் ஆலங்குளம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சின்னத்துரை மற்றும் போலீசார் அங்கு சென்று, 10 டன் எடை கொண்ட கழிவுகளை லாரியுடன் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், கேரள மாநிலம் கோட்டயத்தில் இருந்து கழிவுகளை எரிப்பதற்காக சிவலார்குளம் காட்டுப்பகுதிக்கு கொண்டு வரப்பட்டது தெரியவந்தது. இதுதொடர்பாக செங்கோட்டையை சேர்ந்த லாரி டிரைவர் கார்த்திக் முருகன் (வயது 33), அவருடைய தந்தை கணேசன் (60) ஆகியோரை போலீசார் கைது செய்து ஆலங்குளம் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.