மயிலம் அருகேகாரில் கடத்திய 30 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்3 பேர் கைது


மயிலம் அருகேகாரில் கடத்திய 30 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்3 பேர் கைது
x
தினத்தந்தி 23 Dec 2022 12:15 AM IST (Updated: 23 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

மயிலம் அருகே காரில் கடத்திவரப்பட்ட 30 கிலோ புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விழுப்புரம்


மயிலம்,

திண்டிவனம் மதுவிலக்கு அமல்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் இளவழகி, சப்-இன்ஸ்பெக்டர் ஞானசேகர் ஆகியோர் தலைமையிலான போலீசார் நேற்று மயிலம்-வீடூர் சாலையில் தென் ஆலப்பாக்கம் ஏரிக்கரை அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக அ.தி.மு.க. கொடியுடன் வந்த காரை சந்தேகத்தின்பேரில் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது காரில் இருந்த 2 சாக்கு மூட்டைகளை பிரித்து பார்த்ததில், 30 கிலோ எடையிலான அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, பான்பராக் போன்ற புகையிலை பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து காரில் இருந்த 3 பேரிடம் நடத்திய விசாரணையில், அவர்கள், மேல்மலையனூர் மந்தவெளி தெருவை சேர்ந்த டிரைவர் செல்வம் (வயது 30), ரெட்டணை ராஜிவ் நகரை சேர்ந்த வெங்கடேசன் மகன் சஞ்சய் என்கிற ராமலிங்கம் (23), ஆலகிராமத்தை சேர்ந்த முனுசாமி மகன் சுரேஷ் (23) ஆகியோர் என்பதும், மேல்மலையனூரில் இருந்து வீடூர் பகுதியில் உள்ள மளிகை கடைகளுக்கு புகையிலை பொருட்களை விற்பனைக்காக கடத்தி வந்தபோது சிக்கியதும் தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் மதுவிலக்கு போலீசார் மயிலம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும் கடத்தி வரப்பட்ட புகையிலை பொருட்கள், அதனை கடத்த பயன்படுத்தப்பட்ட கார் ஆகியவையும் மயிலம் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்த புகாரின்பேரில் மயிலம் போலீசார் வழக்குப்பதிந்து, செல்வம் உள்ளிட்ட 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story