சாலையில் சுற்றித்திரிந்த மாடுகள் பறிமுதல்
வால்பாறையில் சாலையில் சுற்றித்திரிந்த மாடுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
வால்பாறை,
வால்பாறை நகர் மற்றும் எஸ்டேட் பகுதி சாலைகளில் ஆடு, மாடு போன்ற கால்நடைகள் சுற்றித்திரிந்து வருகின்றன. இவை போக்குவரத்துக்கு இடையூறாக உலா வருவதால், விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. சமீபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபர் சாலையின் குறுக்கே மாடு ஓடிவந்ததால் விபத்தில் சிக்கி உயிரிழந்தார். இதையடுத்து கோவை மாவட்ட கலெக்டர் சமீரன் உத்தரவின் பேரில் வால்பாறை நகராட்சி சார்பில், கால்நடைகளை சாலையில் சுற்றித்திரிய விடக்கூடாது. தவறும் பட்சத்தில் மாடுகள் பறிமுதல் செய்யப்படும் என்று கால்நடை வளர்ப்பவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இருப்பினும் சாலையில் கால்நடைகள் சுற்றித்திரிந்தன.
இந்தநிலையில் வால்பாறை நகராட்சி மூலம் சாலையில் சுற்றித்திரிந்த மாடுகளை தூய்மை பணியாளர்கள் பறிமுதல் செய்தனர். 7 மாடுகள் பறிமுதல் செய்து ஒரு இடத்தில் அடைக்கப்பட்டது. மேலும் அதன் உரிமையாளர்களுக்கு தலா ரூ.500 வீதம் ரூ.3,500 அபராதம் விதிக்கப்பட்டது. இனி வரும் நாட்களில் சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகள் பறிமுதல் செய்யப்பட்டால் மீண்டும் உரிமையாளர்களுக்கு திருப்பி வழங்கப்படாது. கோசாலையில் கொண்டு போய் விடப்படும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.