கட்டு, கட்டாக 500 ரூபாய் கள்ளநோட்டுகள் பறிமுதல்


கட்டு, கட்டாக 500 ரூபாய் கள்ளநோட்டுகள் பறிமுதல்
x
தினத்தந்தி 11 Oct 2022 12:15 AM IST (Updated: 11 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

தென்காசி, செங்கோட்டையில் கட்டு, கட்டாக 500 ரூபாய் கள்ளநோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. கஞ்சாவும் சிக்கியது. இதுதொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்

தென்காசி

தென்காசி, செங்கோட்டையில் கட்டு, கட்டாக 500 ரூபாய் கள்ளநோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. கஞ்சாவும் சிக்கியது. இதுதொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

தீவிர சோதனை

தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் உத்தரவின்பேரில், தென்காசி துணை போலீஸ் சூப்பிரண்டு மணிமாறன் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் தென்மண்டல காவல்துறை தலைவரின் தனிப்படையினர் தென்காசி பகுதிகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது தென்காசி புதிய பஸ் நிலையத்தில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர். அவர்கள் தென்காசி உடையார் தெருவை சேர்ந்த ராஜா மகன் மணிச்செல்வன் (வயது 28), செங்கோட்டை பெரியபிள்ளைவலசை பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த அனஞ்சகும்பு மகன் மணிகண்டன் (24) என தெரியவந்தது.

கஞ்சா பறிமுதல்

போலீசார் விசாரணை நடத்தியபோது, முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர். இதையடுத்து அவர்களிடம் தீவிர விசாரணை செய்தனர். அப்போது ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் மதிப்புள்ள சுமார் 4 கிலோ கஞ்சாவும், ரூ.2 லட்சம் மதிப்பிலான 500 ரூபாய் கள்ளநோட்டுகளும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். கஞ்சாவையும், கள்ளநோட்டுகளையும் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து இது சம்பந்தமாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

செங்கோட்டை

இதேபோல் செங்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இசக்கி தலைமையிலான போலீசார் பெரியபிள்ளைவலசை சாலையில் அமைந்துள்ள கருப்பசாமி கோவில் அருகே ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் சந்தேகப்படும்படியாக 2 வாலிபர்கள் நின்று கொண்டிருந்தனர். போலீசாரை கண்டதும் 2 பேரும் தப்பி ஓட முயன்றனர்.

உடனே 2 பேரையும் போலீசார் மடக்கி பிடித்தனர். விசாரணையில், அவர்கள் செங்கோட்டை அருகே உள்ள தெற்குமேடு ஆர்.சி. தெருவை சேர்ந்த பிரகலாதன் (31), விஸ்வநாதபுரத்தை சேர்ந்த மாரிமுத்து (35) என்பது தெரியவந்தது.

கள்ளநோட்டுகள்

2 பேரின் கையில் இருந்த பையை போலீசார் சோதனை செய்தபோது அதில் கட்டு, கட்டாக 500 ரூபாய் நோட்டுகள் இருந்தது. அதனை போலீசார் ஆய்வு செய்தபோது, அவை கள்ளநோட்டு என்பது தெரியவந்தது. இதையடுத்து சுமார் ரூ.2.25 லட்சம் மதிப்பிலான கள்ளநோட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து 2 பேரையும் கைது செய்தனர்.

இதுகுறித்து தென்காசி மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சார்லஸ் கலைமணி தென்காசி போலீஸ் நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறும்போது, கள்ளநோட்டுகள், கஞ்சா வைத்திருந்ததாக 4 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர், என்றார்.


Next Story