குமரி அருகே குடோனில் பதுக்கி வைத்திருந்த 200 கிலோ குட்கா பறிமுதல் - 2 பேர் கைது
மார்த்தாண்டம் பகுதியில் குடோனில் பதுக்கி வைத்திருந்த 200 கிலோ குட்காவை போலீசார் பறிமுதல் செய்து இருவரை கைது செய்தனர்.
குமரி,
தமிழகத்தில் கஞ்சா , போதை பொருள்கள், தடைசெய்யப்பட்ட புகையிலை மற்றும் குட்கா பொருட்கள் அதிக அளவில் புழங்கி வருவதாலும், மாணவர்கள் மத்தியில் போதைப் பழக்கம் அதிகரித்து வருவதாலும், அதனை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அனைத்து மாவட்டங்களிலும் போலீசார் அதிரடி சோதனைகள் மேற்கொண்டு பதுக்கி வைத்திருக்கும் கஞ்சா, புகையிலை பொருட்களை கைப்பற்றி வருகின்றனர். இந்நிலையில், இன்று அதிகாலை குமரி மாவட்டம், மார்த்தாண்டம் போலீசாருக்கு அங்குள்ள கடை ஒன்றில் போதை பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது.
அந்த தகவலின் அடிப்படையில் இன்று அதிகாலையில் தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் மகேஸ்வரராஜ், மார்த்தாண்டம் இன்ஸ்பெக்டர் செந்தில் வேல் குமார் ,தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் சிவசங்கர் மற்றும் போலீசார் மார்த்தாண்டம் மார்க்கெட் ரோட்டில் உள்ள ஒரு பிரபல மொத்த விற்பனை கடையிலும் மற்றும் குடோனிலும் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
அங்கு மூட்டை மூட்டையாக 200 கிலோ குட்கா பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது .இதனையடுத்து குட்காவை பறிமுதல் செய்த போலீசார் அப்போது அங்கு பணியில் இருந்த மார்த்தாண்டத்தை அடுத்த நெல்வேலி ஓச்சவிளையை சேர்ந்த கிறிஸ்டோபர் (வயது 49), வீயன்னூர் செவரக்கோட்டை சேர்ந்த முருகதாஸ்(38) ஆகிய இருவரையும் கைது செய்தனர். மேலும், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.