சீமானை கைது செய்யுங்கள் - நடிகை விஜயலட்சுமி மீண்டும் புகார்


சீமானை கைது செய்யுங்கள் -  நடிகை விஜயலட்சுமி மீண்டும் புகார்
x
தினத்தந்தி 28 Aug 2023 9:02 AM GMT (Updated: 28 Aug 2023 9:53 AM GMT)

பெரியார் கொள்கையை பின்பற்றுகிறேன் எனக்கூறி சீமான் தன்னை திருமணம் செய்து கொண்டதாகவும் அவரை கைது செய்ய வேண்டும் என நடிகை விஜயலட்சுமி புகாரில் கூறியுள்ளார்.

சென்னை,

தமிழில் பிரண்ட்ஸ் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை விஜயலட்சுமி. இவர், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தன்னை திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றிவிட்டதாக குற்றம் சாட்டினார்.

சீமானுக்கு எதிராக ஏற்கெனவே 2011-ஆம் ஆண்டு நடிகை விஜயலட்சுமி புகார் அளித்திருந்தார். மேலும், கடந்த 2020-ஆம் ஆண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட விஜயலட்சுமி உயிர் பிழைத்தார்.

இந்நிலையில், திருமணம் செய்து ஏமாற்றிய சீமானை கைது செய்ய வேண்டும் என்று சென்னை மாநகர காவல் ஆணையரை இன்று நேரில் சந்தித்து மீண்டும் விஜயலட்சுமி புகார் அளித்துள்ளார். அவருடன் தமிழர் முன்னேற்றப் படை நிறுவனத் தலைவர் வீரலட்சுமியும் காவல் ஆணையரை சந்தித்தார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் வீரலட்சுமி பேசியது:

"கடந்த 2008-ஆம் ஆண்டு முதல்முறையாக சீமானை விஜயலட்சுமி சந்தித்தார். அதன்பிறகு இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஒரு போராட்டத்தில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்ட சீமான், நிபந்தனை ஜாமின் பெற்று மதுரையில் தங்கியிருந்தார். அப்போது, விஜயலட்சுமியை தொடர்பு கொண்ட சீமான் மதுரைக்கு அழைத்தார்.சீமானின் அழைப்பின் பேரில் 4 முறை விஜயலட்சுமி மதுரைக்கு சென்று வந்தார். அதற்கான ஆதாரங்கள் காவல் ஆணையரிடம் கொடுக்கப்பட்டுள்ளது.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மாலை மாற்றி விஜயலட்சுமியை சீமான் திருமணம் செய்து கொண்டார். பெரியார் கொள்கையை பின்பற்றுவதாலும், கிறிஸ்துவர் என்பதாலும் தாலி கட்டும் பழக்கம் இல்லை என்று சீமான் அப்போது தெரிவித்தார்.

சென்னையில் பிரபாகரன் தலைமையில் மிக பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொள்ளலாம் என்றும், அதனால் திருமணம் குறித்து யாரிடமும் சொல்ல வேண்டாம் என்றும் சீமான் தெரிவித்தார்.

தொடர்ந்து, நடிகை விஜயலட்சுமி பேசுகையில், "என்னை ஏமாற்றிய சீமானை கைது செய்ய வைக்காமல் விடமாட்டேன். சீமானை கைது செய்யும்வரை போராட்டம் தொடரும்" சீமானை கைது செய்ய வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். கடந்த அதிமுக ஆட்சியில் சீமான் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனத் தெரிவித்தார்.


Next Story