சான்றுபெற்ற விதைகளை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும்


சான்றுபெற்ற விதைகளை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும்
x

சான்றுபெற்ற விதைகளை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என்று வேளாண் அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மதுரை

பேரையூர்,

சான்றுபெற்ற விதைகளை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என்று வேளாண் அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

விதை விதைக்கும் பணி

மதுரை விதை ஆய்வு துணை இயக்குனர் முருகேசன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- மதுரை மாவட்டத்தில் தற்போது மக்காச்சோளம், நெல், பயறு வகைகள், பருத்தி, காய்கறி விதைகள் ஆகிய விவசாய விதைகள் விதைக்கும் பணி நடைபெற்று வருகிறது. விவசாயிகள் உரிமம் பெற்ற அரசு மற்றும் தனியார் விதை விற்பனை நிலையங்களில் மட்டுமே விதைகளை வாங்க வேண்டும்.

விவசாயிகள் விதைகளை வாங்கும்போது விற்பனை பட்டியல் கேட்டு வாங்க வேண்டும்.விற்பனை பட்டியலில் பயிர், ரகம், குவியல் எண் மற்றும் காலாவதி நாள் குறிப்பிடப்பட்டு உள்ளதா என்று பார்த்து வாங்க வேண்டும். மேலும் விற்பனை பட்டியல் இல்லாமலும், விதை விவர அட்டை இல்லாமலும், விற்பனை செய்யப்படும் விதைகளை விவசாயிகள் வாங்க வேண்டாம்.

விவசாயிகள் தனி நபர்களிடமோ வியாபாரிகளிடமோ விதைகளை வாங்கக்கூடாது. மதுரை மாவட்டத்தில் உள்ள விதை விற்பனையாளர்கள் விதைகளை வாங்கும்போது விதைச்சட்டம் 1966-ல் குறிப்பிட்ட 14 காரணிகளும் விவர அட்டையில் குறிப்பிடப்பட்டு உள்ளதா என்பதை உறுதி செய்த பின்னரே விற்பனை செய்ய வேண்டும்.

நடவடிக்கை

விதை விற்பனையாளர்கள் ஆதார விதை மற்றும் சான்று விதைகளை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். உண்மை நிலை விதைகளை விற்பனை செய்யும்போது தமிழ்நாடு விதைச்சான்று மற்றும் அங்கக சான்றளிப்பு துறையில் பதிவு செய்யப்பட்ட ரகங்களை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். மீறுவோர் மீது விதைகள் சட்டம் 1966-ன் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Related Tags :
Next Story