ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்து காவலாளி பலி
ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்து காவலாளி பலியானார்.
ஜோலார்பேட்டை,
ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்து காவலாளி பலியானார்.
மேற்கு வங்காளம் ரகுநாத் பூர் மாவட்டம் எகுஞ்சா என்ற பகுதியைச் சேர்ந்தவர் பரேஷ்பவுரி மகன் பிஸ்வஜித் பவுரி (வயது 25). இவர் பெங்களூருவில் உள்ள வொண்டர்லா பொழுதுபோக்கு பூங்காவில் காவலாளியாக வேலை செய்து வந்தார்.
நேற்று முன் தினம் விடுமுறையில் தனது சொந்த ஊருக்கு செல்ல நண்பருடன் பெங்களூருவில் இருந்து புவனேஸ்வர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணம் செய்தார்.
அந்த ரெயில் நேற்று காலை விண்ணமங்கலம்-ஆம்பூர் ரெயில் நிலையங்களுக்கு இடையே சென்று கொண்டிருந்தது.
மின்னூர் பகுதியில் சென்றபோது படிக்கட்டில் பயணம் செய்த பிஸ்வஜித்பவுரி ரெயிலிலிருந்து தவறி விழுந்தார். இதில் அவர் அந்த இடத்திலேயே இறந்து விட்டார். அவரது நண்பர் ரெயிலின் உள்ளே இருந்ததால் அவர் பிஸ்வஜித் பவுரி விழுந்ததை கவனிக்கவில்லை. ரெயில் பெட்டி முழுவதும் தேடிப்பார்த்தும் அவரை காணவில்லை. இந்த நிலையில் ரெயில் காட்பாடி வந்ததும் ரெயில்வே போலீசில் புகார் அளித்தார்.
அவர்கள் அளித்த தகவலின்பேரில் காட்பாடி ரெயில் நிலைய மேலாளர் உடனடியாக ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசாருக்கு தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை செய்ததில் ஆம்பூர் அருகே ஒருவர் ரெயிலில் இருந்து தவறி விழுந்து அடிபட்டு இறந்தது தெரியவந்தது.
உடனடியாக அங்கு சென்று பார்த்தபோது இறந்தது பிஸ்வஜித்பவுரி என்பது தெரியவந்தது.
இதனையடுத்து ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் மற்றும் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.