சீமான் மன்னிப்பு கேட்க வேண்டும்- ஜவாஹிருல்லா அறிக்கை


சீமான் மன்னிப்பு கேட்க வேண்டும்-  ஜவாஹிருல்லா அறிக்கை
x

சீமான் தற்போதைய அவரது சிறுபான்மை வெறுப்பு பரப்புரை மூலம் தன்னை வெளிப்படையாகவே அம்பலப்படுத்தி கொண்டுள்ளார். . இவ்வாறு அறிக்கையில் அவர் கூறி உள்ளார்.

சென்னை,

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

மணிப்பூர் வன்முறை வெறியாட்டங்களை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவித்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அந்த ஆர்ப்பாட்டத்தில் பேசும் பொழுது கிறிஸ்தவர்களையும் முஸ்லிம்களையும் இழிவாகப் பேசியிருப்பதும் வாக்கு சேகரிக்க வரும் வேட்பாளர்கள் மீது அமிலம் வீசுமாறு வன்முறையை தூண்டும் வகையில் உரையாற்றியிருப்பதும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. தி.மு.க.வுக்கும் காங்கிரசுக்கும் தொடர்ந்து வாக்களித்து வருவதால் "முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் சாத்தானின் பிள்ளைகளாய் பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே மாறிவிட்டார்கள்" என்று சீமான் பேசியுள்ளார். இந்த கயமைத்தனமான பேச்சு வன்மையான கண்டனத்துக்கு உரியது. தன் கட்சிக்கு வாக்களிக்காத காரணத்தினாலேயே கிறிஸ்தவர்களையும், முஸ்லிம்களையும் சாத்தானின் பிள்ளைகள் என்று வர்ணிப்பது அநாகரிகமானது, அருவருப்பானது, என்பதோடு அரசியல் நேர்மையற்ற செயலுமாகும். இதை வன்மையாக கண்டிக்கிறோம்.

சீமான் இதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும். முன்பு தாய் மதத்திற்கு திரும்புங்கள் என சங்பரிவார் தொண்டர் போல் பேசியவர் சீமான். தற்போதைய அவரது சிறுபான்மை வெறுப்பு பரப்புரை மூலம் தன்னை வெளிப்படையாகவே அம்பலப்படுத்தி கொண்டுள்ளார். இத்தகைய வேடதாரிகளிடம் தமிழக மக்கள் எச்சரிகையாகவே இருக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.


Next Story