கீழ்ப்பாக்கத்தில் விதிமுறையை மீறி கட்டப்பட்ட 3 மாடி கட்டிடத்துக்கு 'சீல்' - பெருநகர வளர்ச்சிக்குழுமம் நடவடிக்கை
கீழ்ப்பாக்கத்தில் விதிமுறையை மீறி கட்டப்பட்ட 3 மாடி கட்டிடத்துக்கு பெருநகர வளர்ச்சிக்குழுமம் நடவடிக்கையால் ‘சீல்' வைக்கப்பட்டது.
சட்டவிரோதமாக ஆக்கிரமித்து கட்டப்படும் கட்டுமானங்கள் மீது சென்னை பெருநகர வளர்ச்சிக்குழுமம் கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்தவகையில், கீழ்ப்பாக்கம் தோட்டச் சாலையில், தரை தளம் மற்றும் முதல் தளத்தில் 2 குடும்பங்கள் தங்கும் வகையில் குடியிருப்பு கட்டுவதற்கான திட்ட ஒப்புதல் பெருநகர சென்னை மாநகராட்சியிடம் இருந்து, அதன் உரிமையாளர் பெற்று இருந்தார். ஆனால் அதனை மீறி, வணிக ரீதியிலான பயன்பாட்டுக்காக தரை தளம் மற்றும் 3 மாடிகள் கட்டியதும், அதில் ஆயத்த ஆடை மொத்த விலைக்கு விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, அந்த கட்டிடத்தின் உரிமையாளருக்கு, நிலம் முன்பு இருந்தது போன்று பழைய நிலைக்கு கொண்டுவரவேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
அதனை செய்ய தவறும்பட்சத்தில், கட்டிடத்தை பூட்டி 'சீல்' வைத்து, ஆக்கிரமிப்பு அகற்றப்படும் என்று கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 24-ந்தேதி மற்றும் கடந்த ஜூலை 15-ந்தேதி அனுப்பிய அந்த நோட்டீசில் குறிப்பிட்டு இருந்தது. ஆனால் அந்த கட்டித்தின் உரிமையாளர், பெருநகர வளர்ச்சிக்குழுமம் அனுப்பிய நோட்டீசை பொருட்படுத்தவில்லை. இதையடுத்து, விதிமுறையை மீறி கட்டப்பட்ட அந்த 3 மாடி கட்டிடம் நேற்று பூட்டி, 'சீல்' வைக்கப்பட்டது.