2 டாஸ்மாக் கடைகளுக்கு 'சீல்' வைப்பு


2 டாஸ்மாக் கடைகளுக்கு சீல் வைப்பு
x

மயிலாடுதுறை பகுதியில் மதுபான பார்கள் அனுமதியின்றி செயல்பட்டதால் 2 டாஸ்மாக் கடைகளை அதிகாரிகள் பூட்டி ‘சீல்’ வைத்தனர். இதனால் மதுப்பிரியர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்று வருகின்றனர்.

மயிலாடுதுறை


மயிலாடுதுறை பகுதியில் மதுபான பார்கள் அனுமதியின்றி செயல்பட்டதால் 2 டாஸ்மாக் கடைகளை அதிகாரிகள் பூட்டி 'சீல்' வைத்தனர். இதனால் மதுப்பிரியர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்று வருகின்றனர்.

அதிக வருவாய்

மயிலாடுதுறை நகரில் காமராஜர் பஸ் நிலையம், புதிய பஸ் நிலையம், மகாதானத்தெரு, கூறைநாடு பஸ் நிறுத்தம் மற்றும் மூவலூர் காவிரி ஆற்றங்கரை என 5 இடங்களில் 6 டாஸ்மாக் கடைகள் உள்ளன.

அதில் டாஸ்மாக் நிறுவனத்திற்கு அதிக வருவாய் ஈட்டி தந்தது காமராஜர் பஸ் நிலையம் பின்புறம் பஜனைமட சந்தில் இயங்கிய டாஸ்மாக் கடைதான். இந்த கடைக்கு எப்போதும் கூட்டம், கூட்டமாக மதுப்பிரியர்கள் சென்று வந்ததால் திருவிழா நடப்பது போல இருக்கும்.

டாஸ்மாக் கடைக்கு சீல்

அத்தகைய வசூல் தரக்கூடிய டாஸ்மாக் கடை கடந்த 5-ந் தேதி இரவு எந்தவித அறிவிப்பும் இன்றி டாஸ்மாக் அதிகாரிகளால் பூட்டி சீல் வைக்கப்பட்டது. டாஸ்மாக் கடை பூட்டப்பட்டு 18 நாட்கள் கடந்தும் இதனை அறியாத மதுப்பிரியர்கள் தினமும் கடையை பார்த்து விட்டு ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

இதுகுறித்து டாஸ்மாக் ஊழியர்கள் சிலரிடம் கேட்டபோது, பஸ் நிலையம் பின்புறம் இயங்கிய டாஸ்மாக் கடையில் பார் நடத்தியவர்கள் கடந்த சில மாதங்களாக கட்ட வேண்டிய மாதாந்திர தொகையை நிர்வாகத்திற்கு கட்டவில்லை என்பதால் அதிகாரிகள் டாஸ்மாக் கடையை பூட்டி சீல் வைத்தாக தெரிவித்தனர்.

அனுமதியின்றி செயல்பட்டது

மதுபான பாரை மூடுவதற்கு பதிலாக ஏன் கடையை மூடுகிறீர்கள் என்று கேட்டதற்கு அனுமதி இன்றி இந்த பார் இயங்கியவதாகவும், கடை இருந்தால்தானே இங்கு பார் நடத்துவார்கள், அதனால்தான் கடையை பூட்டுகிறோம் என்று கூறிவிட்டு அதிகாரிகள் சென்றனர். அங்கு பணிபுரிந்த ஊழியர்களுக்கும் மாற்றுபணி எதுவும் இதுவரை வழங்கப்படவில்லை என்றனர்.

இதே காரணத்தை கூறி மயிலாடுதுறை மூவலூர் காவிரிக்கரை அருகில் உள்ள டாஸ்மாக் கடையையும் டாஸ்மாக் அதிகாரிகள் பூட்டி சீல் வைத்துள்ளனர்.

மதுப்பிரியர்கள் ஏமாற்றம்

கிராமப்புற பகுதியில் உள்ளவர்கள் அதிக அளவில் சென்று வந்த டாஸ்மாக்கடை பூட்டப்பட்டதால், மதுப்பிரியர்கள் நகரின் மைய பகுதியை நோக்கி சென்று மதுவை வாங்கி செல்கின்றனர்.

அதேசமயம் பஸ் நிலையம் பின்புறம் உள்ள டாஸ்மாக் கடை மூடப்பட்டது தொடர்பாக அந்த பகுதியில் வணிக நிறுவனங்கள் நடத்தி வரும் வணிகர்கள் கூறுகையில், எந்த காரணத்திற்காக டாஸ்மாக் கடையை மூடி இருந்தாலும், எங்களுக்கு இப்போதுதான் நிம்மதியாக இருக்கிறது என்றனர்.

இதே போல மூவலூர் பகுதி பொதுமக்கள் கூறுகையில், எங்கள் பகுதியில் டாஸ்மாக் கடையை மூடக்கோரி பல போராட்டங்கள் நடத்தினோம். அப்போதெல்லாம் மூடப்படாத டாஸ்மாக் கடை, இப்போதாவது மூடப்பட்டதே என்று தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.


Next Story