அதிராம்பட்டினத்தில், 150 மீட்டர் தூரம் கடல் உள்வாங்கியது


அதிராம்பட்டினத்தில், 150 மீட்டர் தூரம் கடல் உள்வாங்கியது
x

அதிராம்பட்டினத்தில், 150 மீட்டர் தூரம் கடல் உள்வாங்கியது. இதனால் படகை கடலுக்குள் செலுத்த முடியாமல் மீனவர்கள் தவித்து வருகிறார்கள்.

தஞ்சாவூர்

அதிராம்பட்டினம்

அதிராம்பட்டினத்தில், 150 மீட்டர் தூரம் கடல் உள்வாங்கியது. இதனால் படகை கடலுக்குள் செலுத்த முடியாமல் மீனவர்கள் தவித்து வருகிறார்கள்.

கடல் உள்வாங்கியது

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் கடற்பகுதியில் நேற்று முன்தினம் வரை பலமான காற்று வீசி வந்த நிலையில் நேற்று அதிகாலையில் காற்று குறைந்து காணப்பட்டது. இந்நிலையில் நேற்று அதிகாலை கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல இருந்த ஏரிப்புறக்கரை மீனவர்கள் காலை 5 மணி அளவில் துறைமுகத்துக்கு வந்தனர். அப்போது கடலில் துறைமுக வாய்க்காலில் நிறுத்தப்பட்டிருந்த படகுகள் தண்ணீரின்றி நிற்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். துறைமுக வாய்க்காலில் எந்த நேரமும் 5 அடிக்கு குறையாமல் தண்ணீர் இருக்கும்.ஆனால் நேற்று தண்ணீரே இல்லாமலும் மேலும் கரையிலிருந்து கடல் உள்வாங்கி தண்ணீர் இல்லாமல் வெறும் தரையை போல் காட்சியளித்தது. இதையடுத்து கடலுக்கு செல்ல தயாராக இருந்த பெரும்பாலான மீனவர்கள் கடலுக்குச் செல்லாமல் வீடு திரும்பினர்.ஒருசில நேரங்களில் 10 மீட்டர் தூரம் வரைதான் கடல் உள்வாங்கும். ஆனால் நேற்று 150 மீட்டர் தூரம் வரை கடல் உள்வாங்கி இருந்தது.

மீன்பிடிக்க செல்லவில்லை

இது குறித்து ஏரிப்புறக்கரை கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் கூறியதாவது:-

நேற்று அதிகாலை நாங்கள் மீன் பிடிக்கச் செல்ல கடலுக்கு வந்து பார்த்தபோது கடல் கடுமையாக உள்வாங்கி இருந்தது. இது எங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. காலை நேரங்களில் தை மாதம் முதல் சித்திரை மாதம் வரை 10 மீட்டர் தான் கடல் உள்வாங்கும். ஆனால் நேற்று அதிக அளவில் கடல் உள்வாங்கியதால் பெரும்பாலான மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் திரும்பி விட்டோம் என கூறினர்.

கயிறு கட்டி இழுத்தனர்

மேலும் கடலுக்கு சென்ற மீனவர்கள் கரை திரும்பும் போது கடல் வாய்க்கால் துறைமுகப் பகுதியில் தண்ணீர் இல்லாததால் படகுகளை கரைக்கு கொண்டு வரமுடியாமல் தவித்து வந்தனர். இந்தநிலையில் கடந்த 2 நாட்களாக நள்ளிரவு 12 மணி முதல் மறுநாள் மதியம் 12 மணி வரை கடல் அதிக அளவில் உள்வாங்கியதால் மீனவர்கள் சேற்றில் சிக்கிய படகுகளை சக மீனவர்கள் மூலம் கயிறு கட்டி இழுத்து கரை சேர்த்தனர்.

தூர்வார கோரிக்கை

மீன்பிடி தொழில் பாதிக்கப்பட்டு உள்ளதால் மீனவர்கள் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. வழக்கமாக அதிராம்பட்டினம் ஏரிப்புறக்கரை துறைமுக வாய்க்காலில் 5 அடி ஆழம் குறையாமல் கடல் நீர் நிற்கும். கடந்த கஜா புயலால் துறைமுக வாய்க்கால் முற்றிலும் தூர்ந்து விட்டதால் கடல் உள்வாங்கும் நேரத்தில் துறைமுக வாய்க்காலில் தண்ணீர் இல்லாமல் இருப்பதால் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல முடியாமல் மீனவர்கள் தவிப்பதால் துறைமுக வாய்க்காலை தூர்வார வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story