மீன்பிடி தடைகாலம் தொடங்கியது; வரும் நாட்களில் உயர வாய்ப்பு
மீன்பிடி தடைகாலம் தொடங்கியுள்ள நிலையில், போதுமான இருப்பு உள்ளதால் மீன்கள் விலையில் மாற்றம் இல்லை. ஆனாலும் வரும் நாட்களில் விலை உயர வாய்ப்புள்ளதாக மீனவர்கள் தெரிவித்தனர்.
மீன்பிடி தடைகாலம்
மீன்களின் இனப்பெருக்கத்தை அதிகரிக்க, ஒவ்வொரு ஆண்டும் மீன்பிடி தடைகாலத்தை மத்திய அரசு நடைமுறைப்படுத்துகிறது. இதில் கிழக்கு கடற்கரை பகுதிகளில் ஏப்ரல் 15-ந்தேதி முதல் ஜூன் 14-ந்தேதி வரையிலான இடைபட்ட 61 நாட்கள் மீன்பிடி தடைகாலமாக ஆண்டுதோறும் அமல்படுத்தப்பட்டு வருகிறது.
அதன்படி இந்த ஆண்டு மீன்பிடி தடைகாலம் கடந்த 15-ந்தேதி அதிகாலை முதல் தொடங்கியது. எனவே ஆழ்கடலில் மீன்பிடிக்க படகுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் கிழக்கு கடற்கரை பகுதிகளில் வரும் சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், நாகப்பட்டினம், ராமநாதபுரம், தஞ்சை, புதுக்கோட்டை, தூத்துக்குடி, நெல்லை மற்றும் கன்னியாகுமரி உள்பட 14 கடலோர மாவட்டங்களில் இருக்கக்கூடிய 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆழ்கடல் மீன்பிடி விசைப்படகுகள் கரைகளில் வரிசை கட்டி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
மீன்கள் விலையில் மாற்றம் இல்லை
சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் ஏராளமான விசைப்படகுகள் கரையோரம் நிறுத்தப்பட்டுள்ளன. அனுமதிக்கப்பட்ட நாட்டு படகுகள் மட்டுமே குறிப்பிட்ட எல்லைகளில் மீன்பிடித்து திரும்புகிறது. அதேவேளை விடுமுறை நாளான நேற்று வானகரம், காசிமேடு, எண்ணூர், திருவான்மியூர், சிந்தாதிரிப்பேட்டை, காவாங்கரை, பெரம்பூர், வில்லிவாக்கம், நொச்சிக்குப்பம், பட்டினப்பாக்கம் உள்பட சென்னையில் உள்ள முக்கிய மீன் மார்க்கெட்டுகளில் நேற்று மீன்கள் வாங்க மக்கள் ஆர்வம் காட்டினர்.
பொதுவாகவே மீன்பிடி தடைகாலங்களில் தேவை காரணமாக மீன்களின் விலை தாறுமாறாக உயரும். தடைகாலம் தொடங்கியது முதலே விலை உயர்வு எட்டி பார்த்துவிடும். ஆனால் இந்தமுறை தடைகாலம் தொடங்கியுள்ள நிலையில் மீன்கள் விலையில் எந்த மாற்றமும் இல்லை. போதுமான இருப்பு உள்ளதால் மீன்கள் விலை அதிகரிக்கவில்லை என்று மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து சென்னை வானகரம் மீன் மார்க்கெட் நிர்வாகி துரை கூறியதாவது:-
காரணம் என்ன?
மீன்பிடி தடைகாலத்தையொட்டி, கடந்த 14-ந்தேதியே விசைப்படகுகளில் வந்த மீன்கள் சனி, ஞாயிற்றுக்கிழமை வியாபாரம் கருதி இருப்பில் வைக்கப்பட்டன. அந்த மீன்கள் தான் மார்க்கெட்டுகளுக்கு விற்பனைக்காக வந்துள்ளன. எனவே மார்க்கெட்டுகளில் போதுமான அளவில் மீன்கள் இருப்பு இருக்கிறது. அதனால் மீன்கள் விலையும் உயரவில்லை. வரும் நாட்களில் பற்றாக்குறை அடிப்படையில் விலை ஏறலாம்.
அதேபோல இன்றைக்கு (அதாவது நேற்று) சர்வ ஏகாதசி என்பதால் பெரியளவில் மக்கள் கூட்டம் இல்லை. நாளை (அதாவது இன்று) பிரதோஷம் என்பதாலும், 18-ந்தேதி சிவராத்திரி என்பதாலும், 19-ந்தேதி சர்வ அமாவாசை என்பதாலும் வரும் வாரத்தில் மீன் மார்க்கெட்டுகளில் பெரியளவில் விற்பனை பாதிக்கப்படும். இதனால் வியாபாரிகள் வருத்தத்தில் இருக்கிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
விலை நிலவரம்
சென்னை வானகரம் மீன் மார்க்கெட்டில் மீன்கள் விலை நிலவரம் வருமாறு- (கிலோவில்)
சங்கரா- ரூ.250 முதல் ரூ.300 வரை, அயிலா- ரூ.100 முதல் ரூ.150 வரை, வஞ்சிரம் (சிறியது) - ரூ.600, வஞ்சிரம் (பெரியது) - ரூ.800, கிளிச்சை- ரூ.100, கிழங்கான்-ரூ.100 முதல் ரூ.150 வரை, வவ்வால்-ரூ.750, சீலா- ரூ.250 முதல் ரூ.300 வரை, பாறை- ரூ.400 முதல் ரூ.450 வரை, மத்தி- ரூ.100, கவளை- ரூ.80, ஏரி வவ்வால்- ரூ.110, நெத்திலி- ரூ.150, கடம்பா- ரூ.200, பால்சுறா- ரூ.350, நண்டு (ப்ளூ ஸ்டார்) - ரூ.400 முதல் ரூ.500 வரை, நண்டு (சாதா) - ரூ.250 முதல் ரூ.300 வரை, இறால்- ரூ.200 முதல் ரூ.400 வரை (ரகத்துக்கு ஏற்ப).