பாம்பன், மண்டபத்தில் கடல் சீற்றம்
பாம்பன், மண்டபத்தில் கடல் சீற்றம் ஏற்பட்டது.
பனைக்குளம்,
இலங்கைைய ஒட்டி தென்மேற்கு வங்க கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையானது இன்று (சனிக்கிழமை) நாகப்பட்டினத்திற்கும்-புதுச்சேரிக்கும் இடையே கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையத்தால் அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் வங்க கடலில் உருவாகி உள்ள புயல் சின்னத்தை தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் வடக்கு கடல் பகுதியில் வழக்கத்திற்கு மாறாக நேற்று கடல் சீற்றமாக காணப்பட்டது. பலத்த சூறாவளி காற்று வீசியதுடன் கடல் சீற்றமாக காணப்பட்டதுடன் வடக்கு கடற்கரை பகுதியில் தடுப்பு சுவரில் மோதி கடல் அலைகள் பல அடி உயரத்திற்கு ஆக்ரோசமாக மேல்நோக்கி சீறி எழுந்தன. கடல் சீற்றமாக காணப்பட்டதால் மீனவர்கள் படகுகளை பாதுகாப்பாக நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு இருந்தனர்.
இதேபோல் பாம்பன் பகுதியிலும் வழக்கத்திற்கு மாறாக கடல் சீற்றமாக காணப்பட்டது. புயல் சின்னத்தை தொடர்ந்து 3-வது நாளாக மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டதால் மண்டபம், ராமேசுவரம் உள்ளிட்ட பகுதிகளில் 1200-க்கும் மேற்பட்ட விசைப்படகு மற்றும் ஏராளமான நாட்டுப்படகுகளும் மீன்பிடிக்கச் செல்லாமல் கடல் பகுதியில் பாதுகாப்பாக நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.