தூத்துக்குடியில்அறிவியல் தொழில் நுட்ப பூங்கா மக்கள் பயன்பாட்டுக்கு திறப்பு


தினத்தந்தி 26 Oct 2023 12:15 AM IST (Updated: 26 Oct 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில்அறிவியல் தொழில் நுட்ப பூங்கா மக்கள் பயன்பாட்டுக்கு புதன்கிழமை திறக்கப்பட்டது. நவ.14-ந் தேதி வரை இலவசமாக பார்வையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி

தூத்துக்குடியில் அறிவியல் தொழில்நுட்ப பூங்கா பொதுமக்கள் பயன்பாட்டுக்கு நேற்று திறக்கப்பட்டது. வருகிற நவ.14-ந் தேதி வரை இலவசமாக பார்வையிட அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

ஸ்டெம் பார்க்

தூத்துக்குடி மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் அம்பேத்கர் நகரில் சுமார் 9 ஏக்கர் பரப்பளவில் அறிவியல் தொழில்நுட்ப கணித பூங்கா அமைக்கப்பட்டு சமீபத்தில் திறக்கப்பட்டது. இதனை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான பணிகள் நடைபெற்று வந்தன. நேற்று முதல் இந்த பூங்கா பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்தது.

மாணவ-மாணவிகள் அறிவியல், தொழில்நுட்பம், கணிதம் குறித்து தெரிந்துகொள்வதற்கு ஏற்றவகையில் இந்த பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இந்த பூங்காவில், கல்வி மற்றும் அறிவியல் தொழில் நுட்பங்கள் தொடர்பான காட்சிகளை பொதுமக்கள், மாணவ- மாணவிகள் பார்க்கும் வகையில் குறுதிரையரங்கம் 150 இருக்கை வசதிகளுடன் அமைக்கப்பட்டு உள்ளது. இயற்பியல் உபகரணங்கள், கணித உபகரணங்கள் பொறியியல் உபகரணங்கள், மங்கள்யான், சந்திரயான் போன்ற வானவியல் சாதனங்களின் மாதிரிகள் நிறுவப்பட்டுள்ளன. பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பறவைகள், மரங்கள், டைனோசர்கள் போன்றவைகளின் முழு மாதிரிகள் பொதுமக்கள் அறியும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. நவீன தொழில்நுட்பங்களான விர்ச்சுவல் ரியாலிட்டி, ஆக்மென்ட் ரியாலிட்டி, கோள வடிவ திரையில் அறிவியல் நிகழ்வுகளை காணும் அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இலவசமாக..

மேலும், இந்த பூங்காவில் குடிநீர், உணவுக்கூடம், விளையாட்டு சாதனங்கள், கழிவறை வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. இந்த பூங்காவானது முழுவதும் மாணவ, மாணவிகளின் அறிவியல் அறிவை வளர்ப்பதற்கான ஒன்றாகும். இந்த பூங்கா நேற்று திறக்கப்பட்டதையடுத்து ஏராளமான பொதுமக்கள் தங்கள் குழந்தைகளுடன் சென்று பார்வையிட்டனர். இதனை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வரும் நவம்பர் 14-ந் தேதி வரை இலவசமாக பார்வையிடலாம் என மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


Next Story