கடன் பிரச்சினையால் மகளுக்கு விஷம் கொடுத்து கொன்று பள்ளி ஆசிரியர் தற்கொலை


கரூரில் கடன் பிரச்சினையால் மகளுக்கு விஷம் கொடுத்து கொன்று பள்ளி ஆசிரியர் தற்கொலை செய்து கொண்டார். மனைவி தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

கரூர்

கடன் பிரச்சினை

கரூர் காந்திகிராமம் போக்குவரத்து நகரை சேர்ந்தவர் முகமது பரீத் (வயது 49). இவர் கரூரில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி நஸ்ரின்பானு (39). இந்த தம்பதிக்கு ஜூகிந்நாஜ் (16) என்ற மகளும், தன்வீர் (9) என்ற மகனும் உள்ளனர். மகள் ஜூகிந்நாஜ் 11-ம் வகுப்பு படித்து வந்தார்.

தன்வீர் 3-ம் வகுப்பு படித்து வருகிறான்.இவர்களுடன் முகமது பரீத்தின் தாய் உம்மு ஹபீபாவும் வசித்து வருகிறார். முகமது பரீத்துக்கு புதிதாக வீடு வாங்கியதில் கடன் பிரச்சினை இருந்து வந்துள்ளது. கூட்டுறவு வங்கியிலும், தேசிய வங்கியிலும் கடன் பெற்றிருந்ததாக கூறப்படுகிறது. இதனால் குடும்பம் நடத்துவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனால் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

விஷம் கலந்த தண்ணீர்

இதனால் முகமது பரீத் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இதனால் தற்கொலை செய்து கொள்ளும் முடிவுக்கு வந்த அவர் நேற்று முன்தினம் தென்னை மரத்திற்கு தெளிக்கும் சல்பர் மாத்திரைகளை (விஷம்) வாங்கி வந்து, தண்ணீரில் கலந்துள்ளார். முகமது பரீத் அதனை மந்திரித்து கொண்டு வந்த தண்ணீர் எனக்கூறி மனைவி மற்றும் மகளுக்கு கொடுத்துள்ளார். அந்த தண்ணீரில் விஷம் கலந்திருப்பது தெரியாமல் அவர்கள் அதை வாங்கி குடித்தனர்.

பின்னர் முகமது பரீத்தும் அந்த தண்ணீரை குடித்துள்ளார். ஆனால் தனது தாயாருக்கும், மகன் தன்வீருக்கும் விஷம் கலந்த தண்ணீரை கொடுக்கவில்லை. பின்னர், தான் விஷம் குடித்துவிட்டதாக தனது அண்ணன் முகம்மது சாதிக்கிற்கு அவர் தகவல் கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த முகம்மது சாதிக், உடனடியாக முகமது பரீத் வீட்டிற்கு வந்தார். அப்போது முகமது பரீத், நஸ்ரின் பானு, ஜூகிந்நாஜ் ஆகியோர் வீட்டில் மயங்கி கிடந்துள்ளனர். இதனையடுத்து 3 பேரையும் மீட்டு கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தார்.

சிகிச்சை

பின்னர் மேல்சிகிச்சைக்காக அவர்களை கோவை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு நேற்று முன்தினம் ஜூகிந்நாஜ் பரிதாபமாக இறந்தார். பின்னர் முகமது பரீத், நஸ்ரின் பானு ஆகியோரின் உடல்நிலை மோசமானதால் மேல்சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்.

ஆனால் செல்லும் வழியிலேயே முகமது பரீத் இறந்து விட்டார். ஆபத்தான நிலையில் உள்ள நஸ்ரின்பானுவுக்கு கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து தாந்தோணிமலை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story