விழுப்புரத்தில் ஓடும் பஸ்சில் பள்ளி மாணவர்கள் ரகளை
விழுப்புரத்தில், அரசு டவுன் பஸ்சில் பயணம் செய்த பள்ளி மாணவர்கள் ரகளையில் ஈடுபட்டனர். பஸ்சை டிரைவர், போலீஸ் நிலையத்தில் நிறுத்தியதால் அவர்கள் தப்பி ஓடினர்.
அரசு டவுன் பஸ்
விழுப்புரத்தில் இருந்து கோலியனூர் கூட்டுசாலை வரை செல்லும் அரசு டவுன் பஸ்சை காலை, மாலை வேளைகளில் மாணவர்கள் நலன் கருதி பள்ளி சென்று வரும் நேரங்களில் இயக்க வேண்டும் என்று கடந்த ஆண்டு அப்போதைய மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி, இவ்வளவு நாட்கள் மாணவர்கள் மட்டும் என்று ஸ்டிக்கர் ஒட்டியபடி அந்த பஸ் இயக்கப்பட்டது. இந்த சூழலில் தற்போது அந்த பஸ்சை கோலியனூர் கூட்டுசாலை வரை பொதுமக்கள் சென்று வரும் அரசு டவுன் பஸ்சாக மாற்றப்பட்டது.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோலியனூர் கூட்டுசாலையில் இருந்து விழுப்புரம் புறப்பட்ட அந்த பஸ், ராகவன்பேட்டை பஸ் நிறுத்தத்தில் நின்றுகொண்டிருந்த பள்ளி மாணவர்களை ஏற்றாமல் சென்றதாக கூறப்படுகிறது.
இதனால் மறுநாள் காலை அந்த அரசு டவுன் பஸ், ராகவன்பேட்டை பஸ் நிறுத்தம் வந்தபோது மாணவர்கள், அந்த பஸ்சில் ஏறி அதன் டிரைவர் மற்றும் கண்டக்டரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பஸ்சை, கம்பன் நகர் பகுதியில் சாலையோரமாக நிறுத்திவிட்டு அதன் டிரைவர் கீழே இறங்கினார். அதன் பிறகு சிறிது நேரம் கழித்து அந்த பஸ் மீண்டும் புறப்பட்டது.
மாணவர்கள் ரகளை
இந்த சூழலில் நேற்று காலை அந்த அரசு டவுன் பஸ், ராகவன்பேட்டை பஸ் நிறுத்தத்திற்கு வந்தது. அப்போது அங்கிருந்த பள்ளி மாணவர்கள் சிலர், அந்த பஸ்சில் ஏறி ரகளையில் ஈடுபட்டனர். அதுமட்டுமின்றி அவர்கள், பஸ்சில் பயணம் செய்த பெண்களிடம் கேலி, கிண்டல் செய்துள்ளனர்.இதைப்பார்த்த பஸ் டிரைவர், கண்டக்டர் அம்மாணவர்களை எச்சரிக்கை செய்தனர். இருப்பினும் அம்மாணவர்கள் அதை கேட்கவில்லை. இதனால் பொறுமையை இழந்த பஸ் டிரைவர், அந்த பஸ்சை தாலுகா போலீஸ் நிலையம் முன்பு நிறுத்தினார். இதைப்பார்த்ததும் அம்மாணவர்கள், பஸ்சில் இருந்து கீழே இறங்கி தப்பி ஓடிவிட்டனர்.
பின்னர் இதுபற்றி பஸ் டிரைவர், கண்டக்டர் ஆகிய இருவரும் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதில், இதுபோன்ற சம்பவம் அந்த அரசு டவுன் பஸ்சில் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. இதில் போலீசார் தலையிட்டு அம்மாணவர்களை கண்டறிந்து அவர்களை நல்வழிப்படுத்த வேண்டும் என்று கூறியிருந்தனர்.