படிக்கட்டில் தொங்கியதை கண்டித்த கண்டக்டர் மீது பள்ளி மாணவர்கள் தாக்குதல்; பஸ்சை இயக்க மறுத்து டிரைவர்கள் போராட்டம்
படிக்கட்டில் தொங்கியதை கண்டித்த கண்டக்டர் மீது பள்ளி மாணவர்கள் தாக்குதல் நடத்தியதை கண்டித்து பஸ்களை இயக்க மறுத்து மாநகர பஸ் டிரைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
படிக்கட்டில் தொங்கினர் பள்ளி மாணவர்கள்
சென்னை ஐகோர்ட்டில் இருந்து எண்ணூர் நோக்கி மாநகர பஸ் (தடம் எண்.4) வந்து கொண்டிருந்தது. கண்டக்டராக டேவிட் பணியில் இருந்தார். காமராஜர் நகர் அருகே பஸ் வந்தபோது பள்ளி மாணவர்கள் படிக்கட்டில் தொங்கியபடியே பயணம் செய்தனர்.
இதனை கண்டக்டர் டேவிட் கண்டித்ததுடன், மாணவர்களை பஸ்சின் உள்ளே வருமாறு அழைத்தார். இதனை கண்டுகொள்ளாத மாணவர்கள், தொடர்ந்து பஸ்சின் படிக்கட்டில் தொங்கியபடி வந்தனர்.
இதையடுத்து பஸ்சை மேலும் இயக்காமல் டிரைவர் சாலையோரம் நிறுத்தினார். இதனால் ஆத்திரம் அடைந்த மாணவர்கள் டிரைவர், கண்டக்டரிடம் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் மாணவர்கள் அங்கிருந்து சென்றுவிட்டனர்.
கண்டக்டர் மீது தாக்குதல்
இதையடுத்து பஸ் மீண்டும் இயக்கப்பட்டு எண்ணூர் பஸ் டெப்போவுக்கு வந்தது. அப்போது பஸ்சை பின்தொடர்ந்து வந்த 2 பள்ளி மாணவர்கள் அங்கே நின்று கொண்டிருந்த கண்டக்டர் டேவிட்டை திடீரென சரமாரியாக தாக்கினர்.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த மற்ற மாநகர பஸ் டிரைவர், கண்டக்டர்கள் 2 மாணவர்களையும் மடக்கிப்பிடித்து எண்ணூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். மாணவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் அவர்களது பெற்றோர்களையும் அழைத்து எச்சரித்தனர்.
அப்போது மாணவர்களின் பெற்றோர் தவறுக்கு வருத்தம் தெரிவித்தனர். இதையடுத்து மாணவர்களை போலீசார் எச்சரித்து அறிவுரை கூறி அனுப்பிவைத்தனர். மாணவர்களின் தாக்குதலில் காயம் அடைந்த கண்டக்டர் டேவிட், ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
திடீர் போராட்டம்
இந்த நிலையில் மாணவர்களின் தாக்குதலை கண்டித்து எண்ணூர் பஸ் டெப்போவில் இருந்து எண்ணூர் காட்டுக்குப்பம், தாழங்குப்பம் வழியாக பஸ்சை இயக்க மறுத்து டிரைவர், கண்டக்டர்கள் நேற்று காலை திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்கள் கத்திவாக்கம் மேம்பாலம் வழியாக பஸ்சை இயக்கினர். இதனால் காட்டுக்குப்பம், தாழங்குப்பம், நெட்டுக்குப்பம் உள்ளிட்ட பகுதியில் இருந்து மாநகர பஸ்சில் பயணம் செய்ய முடியாமல் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.
இதையடுத்து மீனவ கிராம சங்க நிர்வாகிகள், பஸ் டிரைவர் கண்டக்டர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். மீண்டும் இதுபோன்ற தவறுகள் நடக்காமல் பார்த்துக்கொள்வதாக மீனவ சங்க நிர்வாகிகள் உறுதி அளித்தனர். இதன் பின்னர் காலை 8 மணி முதல் மீண்டும் வழக்கமான வழித்தடத்தில் மாநகர பஸ்கள் இயக்கப்பட்டது.