நாகை மாவட்டத்தில், 689 பள்ளிகள் திறப்பு
கோடை விடுமுறைக்குப்பின், நாளை மறுநாள் (திங்கட்கிழமை) நாகை மாவட்டத்தில் 689 பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இதை முன்னிட்டு பள்ளிகளில் தூய்மை பணிகள் நடந்தன.
நாகப்பட்டினம்:-
கோடை விடுமுறைக்குப்பின், நாளை மறுநாள்(திங்கட்கிழமை) நாகை மாவட்டத்தில் 689 பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இதை முன்னிட்டு பள்ளிகளில் தூய்மை பணிகள் நடந்தன.
கோடை விடுமுறை
கொரோனா தொற்று பரவல் குறைந்ததை தொடர்ந்து பள்ளிகள், கடந்த பிப்ரவரி மாதம் 1-ந் தேதி முதல் திறக்கப்பட்டு, வகுப்புகள் நடந்து வந்தன. கடந்த மாதம் (மே) தேர்வுகள் முடிவடைந்ததை தொடர்ந்து கோடை விடுமுறை விடப்பட்டது. இந்த விடுமுறை முடிவடைந்து, நாளைமறுநாள் (திங்கட்கிழமை) முதல் 2022-23-ம் கல்வி ஆண்டு தொடங்குகிறது.
கோடை விடுமுறைக்குப்பின் பள்ளிகள் திறக்கப்படுவதை முன்னிட்டு நாகை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் உள்ள பள்ளிகளில் தூய்மை பணிகள் நடந்தன. நாகையில் உள்ள நடராஜன் தமயந்தி மேல்நிலைப்பள்ளியில் வகுப்பறைகள், கழிவறைகள் மற்றும் பள்ளி வளாகம் முழுவதும் சுத்தம் செய்யப்பட்டன.
இதுகுறித்து நாகை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மதிவாணன் கூறியதாவது:-
689 பள்ளிகள் திறப்பு
நாகை மாவட்டத்தில் கோடை விடுமுறைக்குப்பின்னர் 689 பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. பள்ளி திறப்புக்கான முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட கலெக்டர் தலைமையில் தலைமை ஆசிரியர்கள், வருவாய் துறை, உள்ளாட்சித்துறை அலுவலர்கள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நடந்தது.
அதில் பள்ளிகளை பராமரித்தல், தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் குறித்து ஆலோசிக்கப்பட்டது. நாகை மாவட்டத்தில், பராமரிப்பு இல்லாத அரசு பள்ளி கட்டிடத்தை சீரமைத்தல், பள்ளிகளில் சிதிலம் அடைந்துள்ள கட்டிடங்களை அகற்றுதல், கூடுதல் கழிவறை கட்டுதல், வகுப்பறை மேற்கூரை சீரமைப்பு உள்ளிட்ட பணிகள் குறித்து தலைமை ஆசிரியர்கள் தேவையான விவரங்களை தெரிவித்துள்ளனர். அதன்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கு வரும் மாணவர்கள் பாதுகாப்பாக உணரும் விதமாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன' என்றார்.
திருமருகல் ஒன்றியம் புறாக்கிராமம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளியின் தலைமை ஆசிரியர் மாணிக்கவாசகம் தலைமையில் பள்ளி வளாகம், வகுப்பறைகளில் தூய்மை பணிகள் நடைபெற்றது.