தியாகதுருகம் அருகேமாணவர்களை அச்சுறுத்தும் பள்ளி விடுதி :இரவில் தங்குவதற்கு ஆர்வம் காட்டுவதில்லை
தியாகதுருகம் அருகே மாணவர்களை அச்சுறுத்தும் பள்ளி விடுதியில் இரவில் தங்குவதற்கு அவர்கள் ஆர்வம் காட்டாமல் இருந்து வருகிறார்கள்.
தியாகதுருகம்,
தியாகதுருகம் அருகே கூத்தக்குடி ஊராட்சியில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் கூத்தக்குடி, எறஞ்சி, காச்சக்குடி உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த சுமார் 400-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
இங்கு வெளியூரைச் சேர்ந்த மாணவர்கள் தங்கிப்படிக்கும் வகையில் இதே பகுதியில் ஆதி திராவிடர் நலத்துறை சார்பில் மாணவர் விடுதி அமைந்துள்ளது. இங்கு 6- ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை 57 மாணவர்கள் விடுதியில் தங்குவதற்காக பதிவு செய்துள்ளனர். விடுதியில் சுமார் 14 அறைகள் உள்ளன. ஆனால் மாணவர் விடுதியில் கடந்த சில மாதமாக ஒரு மாணவர் கூட தங்கவில்லை என கூறப்படுகிறது.
ஒரு வேளை உணவு
விடுதியில் தங்க வேண்டிய மாணவர்கள் தினமும் ஊருக்கு செல்வதால் காலை மற்றும் இரவு நேரங்களில் தங்களது வீடுகளில் சாப்பிடுவதாகவும், மதியம் ஒரு வேளை மட்டுமே விடுதிக்கு சாப்பிட வருவதாகவும் கூறப்படுகிறது. அரசுப் பள்ளியில் படிக்கும் வெளியூர் பகுதியை சேர்ந்த மாணவர்கள் தினமும் ஊருக்கு சென்று வந்தால், கால நேரம் வீணாகி அவர்கள் படிப்பில் கவனம் செலுத்த முடியாது என்பதால் அரசு மாணவர் விடுதி அமைத்து 3 வேலை உணவுகளையும் வழங்குகிறது.
ஆனால் இதை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ளாமல் மதியம் ஒருவேளை உணவு மட்டும் உண்பதால் மாணவர் விடுதியின் பயன்பாடு கேள்விக்குறியாக உள்ளது. மேலும் மாணவர்கள் படிப்பதற்கு தேவையான நேரம் கிடைக்காத நிலை ஏற்படும் என அப்பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
அதிகாரிகள் நடவடிக்கை
அதேபோன்று, விடுதியில் தங்காமல் இருப்பதற்கான காரணம் குறித்து, மாணவர்கள் தரப்பில் விசாரித்த போது, அவர்கள் வேறு சில காரணங்களை முன்வைக்கிறார்கள்.
அதாவது, மாணவர் விடுதியில் உள்ள அடிப்படை வசதிகள் மற்றும் பராமரிப்பில் குறைபாடுகள் உள்ளது. அதேபோன்று கட்டிடம் பராமரிப்பு இல்லாமல் இருப்பதால் அதில் தங்குவதற்கு அச்சமாக இருக்கிறது. எனவே தான் அங்கு தங்கி பள்ளிக்கு சென்று வருவதில்லை என்று மாணவர்கள் தரப்பில் தொிவிக்கிறார்கள்.
ஆய்வு செய்ய வேண்டும்
அரசு மாணவர்கள் விடுதியை பொறுத்த வரை, அவர்களது உணவு மற்றும் இதர பொருட்களுக்கு அரசு குறிப்பிட்ட தொகையை செலவு செய்து வருகிறது. ஆனால், இந்த விடுதியில் ஒரே ஒரு வேளை மட்டும் அவர்களுக்கு உணவு அளிக்கப்பட்டு வருகிறது. எனவே அரசு ஒதுக்கீடு செய்யும் நிதி முறையாக ஒவ்வொரு மாணவருக்கும் சென்றடைகிறதா? என்று அதிகாரிகள் ஆய்வு செய்திட வேண்டும்.
அதுமட்டுமின்றி, மாணவர்களை அச்சுறுத்தும் வகையில் உள்ள இந்த கட்டிடத்தை சீரமைப்பது அல்லது அதற்கான மாற்று வழி என்ன என்பதையும் ஆராய்ந்து, விடுதியை மாணவர்கள் முழுமையாக பயன்படுத்தி கல்வி பயில தேவையான நடவடிக்கையை அதிகாரிகள் ஏற்படுத்தி கொடுத்து, கிராமப்புற மாணவர்கள் கல்வியில் முன்னேறுவதற்கான வழியையும் ஏற்படுத்தி தர வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகும்.