எடப்பாடி அருகே பள்ளி மாணவி தற்கொலை-உருக்கமான கடிதம் சிக்கியது


எடப்பாடி அருகே பள்ளி மாணவி தற்கொலை-உருக்கமான கடிதம் சிக்கியது
x

எடப்பாடி அருகே பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்டார். அவர் எழுதிய உருக்கமான கடிதம் சிக்கியது.

சேலம்

எடப்பாடி:

பள்ளி மாணவி

எடப்பாடி அருகே சித்தூர் கிராமம், வெற்றிலைகாரன் காடு பகுதியை சேர்ந்த மணி என்கிற மெய்யப்பன். இவருக்கு 2 மகள்கள், ஒரு மகன் இருந்தனர். இவர்களது மூத்த மகள் திவ்யதர்ஷினி (வயது 17). இவர் சித்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார்.

இந்த நிலையில் திவ்யதர்ஷினிக்கு சமீபத்தில் கண்ணில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் அவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இதனிடையே அவரது சிகிச்சைக்கான செலவிற்கு அவரது பெற்றோர் மிகுந்த சிரமப்பட்டு வந்துள்ளனர்.

தற்கொலை

இந்த நிலையில் காலை திவ்யதர்ஷினியின் பெற்றோர் வேலைக்கு சென்று விட்டனர். பின்னர் வீடு திரும்பிய போது வீட்டின் உள்புறம் கதவு தாழ்பாள் போடப்பட்டு இருந்ததால், கதவை தட்டினர். ஆனால் திறக்கவில்லை. இதைத்தொடர் அவர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே நுழைந்து பார்த்தபோது, அங்கு அவரது மூத்த மகள் திவ்யதர்ஷினி துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த பூலாம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மாணவி திவ்யதர்ஷினியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மாணவி திவ்யதர்ஷினி எழுதிய உருக்கமான கடிதம் சிக்கியது.

அந்த கடிததத்தில், தான் பெற்றோருக்கு மிகுந்த சிரமம் அளிப்பதாகவும், தனது மருத்துவ சிகிச்சைக்காக அவர்கள் அடிக்கடி பணத்திற்கு சிரமப்பட்டு வருவதை தன்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை எனவும், தன் இறப்பிற்கு வேறு யாரும் காரணமில்லை என எழுதி வைத்ததாக கூறப்படுகிறது. கடிதத்தை கைப்பற்றிய போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story