நாமக்கல் மாவட்டம் முழுவதும் 250 தனியார் பள்ளிகள் மூடல்


நாமக்கல் மாவட்டம் முழுவதும்  250 தனியார் பள்ளிகள் மூடல்
x

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தனியார் பள்ளியில் தாக்குதல் நடத்தப்பட்டதை கண்டித்து நாமக்கல் மாவட்டத்தில் நேற்று 250 தனியார் பள்ளிகள் மூடப்பட்டு இருந்தன.

நாமக்கல்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தனியார் பள்ளியில் தாக்குதல் நடத்தப்பட்டதை கண்டித்து நாமக்கல் மாவட்டத்தில் நேற்று 250 தனியார் பள்ளிகள் மூடப்பட்டு இருந்தன.

மாணவி மர்மசாவு

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலத்தை அடுத்த கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்த பிளஸ்-2 மாணவி ஸ்ரீமதி கடந்த 13-ந் தேதி பள்ளியில் மர்மமான முறையில் இறந்தார். மாணவி மரணத்துக்கு பள்ளி நிர்வாகமே காரணம் எனக்கூறி மாணவியின் பெற்றோர், உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் போராட்டம் கலவரமாக மாறி பஸ் எரிப்பு வரை சென்றது.

இந்த நிலையில் பள்ளியின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் நேற்று மெட்ரிக், சி.பி.எஸ்.இ. பள்ளிகள் இயங்காது என தனியார் பள்ளிகள் சங்கத்தின் மாநில தலைவர் நந்தகுமார் அறிவித்து இருந்தார். அதன்படி நாமக்கல் மாவட்டத்திலும் தனியார் பள்ளிகள் இயங்காது என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த அறிவிப்புக்கு இணங்க நாமக்கல் மாவட்டத்தில் பெரும்பாலான தனியார் பள்ளிகள் இயங்கவில்லை. ஒரு சில பள்ளிகள் மாணவ, மாணவிகளை அழைத்து செல்வதற்கு வாகனங்களை அனுப்பாமல் நிறுத்தி கொண்டன. இதனால் மாணவ, மாணவிகளால் பள்ளிக்கு செல்ல முடியவில்லை.

பாதுகாப்பு வழங்க வேண்டும்

இதற்கிடையே நாமக்கல் மாவட்ட தனியார் பள்ளிகள் அமைப்பின் சார்பில் அதன் நிர்வாகிகள் கலெக்டர் அலுவலகம் திரண்டு வந்து மாவட்ட வருவாய் அலுவலர் கதிரேசனிடம் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

இந்தியாவில் மட்டும் அல்லாது உலக அரங்கிலும் தனியார் பள்ளியில் படித்த 80 சதவீத மாணவர்கள் விஞ்ஞானியாகவும், ஆராய்ச்சித்துறை, மருத்துவத்துறை, தகவல் தொழில்நுட்ப துறை, கல்வித்துறை என அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்குவதற்கு தனியார் பள்ளி கல்வித்துறை முக்கியமாக செயல்பட்டு வருகிறது.

இந்த தருணத்தில் கள்ளக்குறிச்சியில் தனியார் பள்ளியில் சமூக விரோதிகள் நுழைந்து பள்ளியை கடுமையாக தாக்கி சேதத்தை ஏற்படுத்தி உள்ளனர். அவர்களை கண்டிக்கும் வகையில் நாமக்கல் மாவட்ட தனியார் பள்ளி அமைப்பு கண்டனத்தை தெரிவித்து கொள்கிறது. இனிவரும் காலங்களில் தமிழகத்தில் பள்ளி கல்வித்துறை விஷயத்தில் சமூக விரோதிகள் அல்லது விஷமிகள் தலையிடுவதை தடுக்கவும், தனியார் கல்வி நிறுவனங்களுக்கு சட்டத்தின் மூலம் பாதுகாப்பு வழங்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறி இருந்தனர்.

250 தனியார் பள்ளிகள் மூடல்

மேலும் தனியார் பள்ளி அமைப்பின் நிர்வாகிகள், நாமக்கல் மாவட்டத்தில் மட்டும் நேற்று நர்சரி, மெட்ரிக் மற்றும் சி.பி.எஸ்.இ. என 250 தனியார் பள்ளிகள் மூடப்பட்டு இருந்ததாகவும், வன்முறையில் ஈடுபட்ட அனைவரையும் உடனடியாக கைது செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.


Next Story