பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுக்கும் பணி
மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுக்கும் பணி நடந்தது.
மயிலாடுதுறை மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்ட உதவி திட்ட அலுவலர் ஞானசேகர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டத்தின் கீழ் 6 முதல் 18 வயது வரை ஒன்றாம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிச் செல்லா, இடைநின்ற மற்றும் மாற்றுத்திறனுடைய குழந்தைகள் கணக்கெடுப்பு பணி கடந்த மாதம் (ஜூலை) 27 -ந்தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்பணியை முதன்மைக் கல்வி அலுவலரின் அறிவுரையின்படியும் உதவி திட்ட அலுவலரின் வழிகாட்டுதலின்படியும் பள்ளி தலைமையாசிரியர்கள், வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள், ஆசிரியர்கள், ஆசிரியர் பயிற்றுனர்கள், சிறப்பாசிரியர்கள் மற்றும் பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் ஒவ்வொரு ஒன்றியங்களிலும் வீடுவீடாகச் சென்று கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல புலம் பெயர்ந்த குழுந்தைகள், செங்கல் சூளைகளில் வேலை செய்பவர்களின் குழந்தைகளையும் கண்டறிந்து பள்ளியில் சேர்க்கை செய்யும் பணி நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் இம்மாணவர்களை பள்ளியில் சேர்க்கை செய்திட தகவல் வழங்க கீழ்க்கண்ட ஒன்றியங்களின் மேற்பார்வையாளர்களின் தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு பயன்பெற கேட்டுக் கொள்ளப்படுகிறது. மயிலாடுதுறை- 9788858781, செம்பனார்கோவில்-9788858782,குத்தாலம்- 9788858783, சீர்காழி- 9788858784, கொள்ளிடம்- 9788858785. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.