சுரங்கப்பாதை வெள்ளத்தில் சிக்கிய பள்ளிக்கூட பஸ்: 20 மாணவ-மாணவிகள் மீட்பு


சுரங்கப்பாதை வெள்ளத்தில் சிக்கிய பள்ளிக்கூட பஸ்: 20 மாணவ-மாணவிகள் மீட்பு
x

கோவில்பட்டியில் நேற்று பலத்த மழை பெய்தது. அப்போது சுரங்கப்பாதை வெள்ளத்தில் சிக்கிய பள்ளிக்கூட பஸ்சில் இருந்து 20 மாணவ-மாணவிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

கோவில்பட்டி,

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகரில் நேற்று மாலை பலத்த மழை கொட்டித்தீர்த்தது. இதனால் ரோடு, தெருக்களில் மழை நீர், கழிவுநீருடன் கலந்து வெள்ளம் போல் ஓடியது.

கோவில்பட்டி இளையரசனேந்தல் ரோட்டில் ரெயில்வே சுரங்க வழிப்பாதை உள்ளது. மேட்டுப்பகுதியில் இருந்து வந்த மழைவெள்ளம் சுரங்கப்பாதையில் பாய்ந்து சென்றது. இந்த பகுதியில் ஓடிய மழை வெள்ளத்தில் வாகனங்கள் தத்தளித்து சென்றன.

அப்போது மாலை 4.45 மணியளவில் அந்த வழியாக தனியார் பள்ளிக்கூட பஸ் ஒன்று வந்தது. அந்த பஸ்சில் 20-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் இருந்தனர். அந்த பஸ் சுரங்கப்பாதையை கடந்து செல்ல முயன்றபோது பழுதானதால் வெள்ளத்தில் சிக்கி நின்றது. டிரைவர் எவ்வளவோ முயன்றும் பஸ்சை அங்கிருந்து இயக்க முடியவில்லை. இதனால் பஸ்சில் இருந்த மாணவ-மாணவிகள் கூச்சலிட்டனர்.

மீட்பு

மழைவெள்ளத்தில் பஸ்சிக்கிக்கொண்டதைஅறிந்ததும் பொதுமக்களும், போக்குவரத்து போலீசாரும் அந்த பகுதிக்கு விரைந்து வந்தனர். பஸ்சுக்குள் சிக்கி தவித்த மாணவ- மாணவிகளை பத்திரமாக மீட்டு வெளியே கொண்டு வந்தனர். இதனைத்தொடர்ந்து மழைவெள்ளத்தில் சிக்கிய பஸ்சை வெளியே கொண்டு வந்தனர்.


Next Story