பள்ளிக்கு விடுமுறை விடுவதில் குழப்பம்; மாணவர்கள் அவதி
ராமநாதபுரம் மாவட்டத்தில் 2-வது நாளாக நேற்றும் சாரல் மழை பெய்தது. இதன்காரணமாக பள்ளிகளுக்கு தெளிவான விடுமுறை அறிவிப்பு செய்யாததால் பெற்றோர்கள்,மாணவர்கள் அவதி அடைந்தனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் 2-வது நாளாக நேற்றும் சாரல் மழை பெய்தது. இதன்காரணமாக பள்ளிகளுக்கு தெளிவான விடுமுறை அறிவிப்பு செய்யாததால் பெற்றோர்கள்,மாணவர்கள் அவதி அடைந்தனர்.
ஆய்வு
வட இலங்கையையொட்டிய தென்மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது. இதன் காரணமாக மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்திலும் பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
சில இடங்களில் பலத்த மழையாகவும், சில இடங்களில் சாரல் மழையாகவும் பெய்து வருகிறது. ஒரு சில இடங்களில் மழையே பெய்யவில்லை என்ற நிலையும் நிலவுகிறது. ராமநாத புரம் மாவட்டத்தில் நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு மி.மீட்டரில் விவரம் வருமாறு:- ராமேசுவரம்-3.2, தங்கச்சிமடம்- 1.2, பாம்பன்-1, திருவாடானை-4.4, வட்டாணம்-6.2, ஆர்.எஸ்.மங்கலம்-2.4, பள்ளமோர்குளம்-6, கமுதி-8.3. சராசரி 2.06.
இந்தநிலையில் நேற்று காலை ராமநாதபுரம் மாவட்டத்தின் சில பகுதிகளில் சாரல் மழை பெய்தது. இதன்காரணமாக பள்ளி மாணவ-மாணவிகள் பள்ளிகளுக்கு வர சிரமம் அடைந்தனர். தொடர்ந்து பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுமா என்ற கேள்வி எழுந்தது. இதுகுறித்து முதன்மை கல்வி அலுவலகம் அந்தந்த பள்ளிகள் அமைந்துள்ள பகுதியில் பெய்யும் மழையை பொறுத்து விடுமுறை விட்டுக் கொள்ள தலைமை ஆசிரியர்களுக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டது.
ஆனால், இந்த உத்தரவின்படி பல பகுதிகளில் மழை பெய்தபோதும் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படவில்லை என்று கூறப்படுகிறது. பள்ளிகள் அமைந்துள்ள பகுதிகளில் மழை பெய்யாத நிலையில் மாணவ-மாணவிகளின் இருப்பிட பகுதிகளில் மழை பெய்துகொண்டு இருந்ததால் பள்ளிகளுக்கு வர சிரமம் அடைந்தனர்.
உத்தரவு
இதன்காரணமாக இதுபோன்ற குழப்பமான நிலை நீடித்ததால் விடுமுறை அல்லது பள்ளிக்கூடம் என்று தெளிவான நிலைப்பாட்டினை மாவட்ட நிர்வாகம் எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து உள்ளது. இனிவரும் காலம் வடகிழக்கு பருவமழை காலம் என்பதால் இதுபோன்ற குழப்பமான நிலை ஏற்படாமல் தவிர்க்க உறுதியான தெளிவான முடிைவ காலை 8 மணிக்கு முன்னதாக அறிவிக்க வேண்டும் என்று பெற்றோர்கள் தரப்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் தரப்பில் விசாரித்த போது, மாவட்டத்தில் நேற்று காலை சாரல் மழையாகத்தான் பெய்தது. பள்ளிக்கு வரமுடியாதபடி மழைபெய்தால்தான் விடுமுறை விட முடியும். அதுபோன்ற நிலை இல்லாதபோது அந்தந்த பகுதி சூழ்நிலைக்கு ஏற்றவாறு விடுமுறை விட உத்தரவிடப்பட்டு உள்ளது என்று கூறினர்.