சின்னமனூர் அருகே பயங்கரம்: ஊராட்சி வாா்டு உறுப்பினர் சரமாரி குத்திக்கொலை


சின்னமனூர் அருகே பயங்கரம்:  ஊராட்சி வாா்டு உறுப்பினர் சரமாரி குத்திக்கொலை
x
தினத்தந்தி 9 Oct 2022 12:15 AM IST (Updated: 9 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

சின்னமனூர் அருகே முன்விரோதத்தில் ஊராட்சி வார்டு உறுப்பினர் கத்தியால் சரமாரி குத்திக்கொலை செய்யப்பட்டார்

தேனி

ஊராட்சி வார்டு உறுப்பினர்

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள சீலையம்பட்டியைச் சேர்ந்தவர் துரைப்பாண்டி (வயது 40). சீலையம்பட்டி ஊராட்சி 1-வது வார்டு கவுன்சிலர். தே.மு.தி.க. நிா்வாகியாகவும் இருந்தார். அதே பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (40). இவரது மகன் மருதன். இவர், போக்சோ வழக்கில் சிறைக்கு சென்று வந்தார். இதற்கு துரைப்பாண்டிதான் காரணம் என செந்தில்குமார் கூறி வந்தார். இதனால் இவர்கள் இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இதுதொடா்பாக அவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று மீண்டும் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில் தகராறாக மாறியது.

குத்திக்கொலை

அப்போது ஆத்திரமடைந்த செந்தில்குமார் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி மிரட்டினார். திடீரென அந்த கத்தியால் அவர், துரைப்பாண்டியை சரமாரியாக குத்தினார். இதில் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த அவர் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். இதற்கிடையே செந்தில்குமார் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இதையடுத்து அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து அவரை மீட்டு சிகிச்சைக்காக சின்னமனூர் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த சின்னமனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இதற்கிடையே துரைப்பாண்டியை குத்தி கொலை செய்த கத்தியுடன் செந்தில்குமார் சின்னமனூர் போலீஸ் நிலையத்தில் சரணடைந்தார்.

இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முன்விரோதத்தில் ஊராட்சி வார்டு உறுப்பினர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story