நீட் தேர்வு விலக்கு கோரி தூத்துக்குடியில கையெழுத்து இயக்கம்- அமைச்சர் கீதா ஜீவன் தகவல்


தினத்தந்தி 21 Oct 2023 12:15 AM IST (Updated: 24 Oct 2023 12:51 PM IST)
t-max-icont-min-icon

நீட் தேர்வு விலக்கு கோரி தூத்துக்குடியில் கையெழுத்து இயக்கம் நடைபெறும் என அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்

தூத்துக்குடி

தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை செயலாளருமான கீதா ஜீவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

நீட் தேர்வு

மருத்துவப்படிப்புக்கு நீட் தேர்வு அவசியம் என்று மத்திய அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது. இதனால் கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. நீட்தேர்வில் இருந்து விலக்கு வேண்டுமென்ற தமிழக மக்களின் வேண்டுகோளை நிறைவேற்றித்தர மத்திய அரசை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இந்த கோரிக்கையை நிறைவேற்றக் கோரி குடியரசு தலைவரிடம் ஒப்படைக்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும் மாணவர்கள், பெற்றோர், பொதுமக்கள் ஆகியோரிடம் 50 நாட்களில் 50 லட்சம் கையொப்பம் பெற வேண்டும் என்று தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மாநில இளைஞர் அணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் வலியுறுத்தி உள்ளனர்.

கையெழுத்து இயக்கம்

அதன்படி தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி, மாணவர் அணி, மருத்துவர் அணி சார்பில் நீட் விலக்கு கோரி கையெழுத்து இயக்கம் தொடக்க விழா தூத்துக்குடி கனிபேலஸ் திருமண மண்டபத்தில் இன்று (சனிக்கிழமை) காலை 10 மணிக்கு நடக்கிறது. இந்த நிகழ்ச்சியில் மாணவர்கள், இளைஞர்கள், பெற்றோர்கள், மருத்துவர்கள், பொதுமக்கள் மற்றும் தி.மு.க. மாநில, மாவட்ட நிர்வாகிகள் தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், சார்பு அணி நிர்வாகிகள் பொதுமக்கள் திரளாக கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.


Next Story